Showing posts with label TNPSC New Syllabus Study Materials.. Show all posts
Showing posts with label TNPSC New Syllabus Study Materials.. Show all posts

Monday

பாரதிதாசன்

GROUP II & II A

         தமிழ்

         பகுதி – இ

தமிழ் அறிஞர்களும், தமிழ் தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.

பாரதிதாசன்

இயற்பெயர் : கனகசுப்புரத்தினம்

பெற்றோர் : கனகசபை, இலக்குமி அம்மாள்

காலம் : 29/04/1891 – 21/04/1964

சிறப்புப்பெயர்கள் : பாவேந்தர் புரட்சிக்கவிஞர், புரட்சிக்கவிஞர், இயற்கைகவிஞர்.

நூல்கள் : பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திட்டு,சேர தாண்டவம், எதிர்பாராத முத்தம், மணிமேகலை வெண்பா, இரணியன், இளைஞர் இலக்கியம், சஞ்சீவி பர்வதத்தின் சாரல், இசையமுது, இருண்ட வீடு, பிசிராந்தையார், படித்த பெண்கள், செளமியன், தமிழியாக்கம், தமிழச்சியின் கத்தி, காதல் நினைவுகள், அமைதி, கண்ணகி புரட்சிக் காப்பியம், நல்ல தீர்ப்பு, தமிழ் இயக்கம்.

குறிப்பு :

F தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் புலமை பெற்றார்.

F பாரதி மீது கொண்ட பற்றினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

F புதுவை அரசு கல்லூரியில் இவர் தமிழாசிரியராகவும் பணி செய்துள்ளார்.

F குயில்,பொன்னி போன்ற இதழ்களை நடத்தினார்.

F பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை கவிதை வடிவில் வெளியிட்டார்.

F இவரது பாடல்கள் செக் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

F இவருடைய பிசிராந்தையார் நாடகம் சாகித்திய அகாடெமி விருது பெற்றுள்ளது.

F தமிழக அரசு பாரதிதாசனுக்கு 1991 ல் நூற்றாண்டு விழா கொண்டாடியது.

F திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தொடக்கப்பட்டது.

F இவர் பாடிய வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே என்ற பாடலை புதுவை அரசு தமிழ் வாழ்த்திப் பாடலாக ஏற்றிக் கொண்டுள்ளது.

மேற்கோள் :

è எங்கெங்கும் காணினும் சக்தியடா.........

è வாடாதப் பூப்போன்ற மங்கை நல்லாள்........

è இருட்டறையில் உள்ளதடா உலகம்.........

è ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்.........

è எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான........

è பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்..........

è எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்........

è கூடத்திலே மனப் பாடத்திலே............

è தமிழுக்கு அமுதென்று பேர்...........

சிறப்பு :

v  தமிழ்நாட்டின் இரசூல் காம்சதோவ் என்று பாராட்டப்பெற்றார். (இரசூல் காம்சதோவ் என்றால் உருசிய நாட்டில் மாககவிஞர் என்று பொருள்.)

v  முதுபெரும்புலவரிடம் தமிழ் இலக்கண இலக்கியத்தைக் கற்றுக் கொண்டார்.

v  இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.

v  தமிழக அரசு இவருடைய படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியுள்ளது.

v  மேலும் ஆண்டு தோறும் சிறந்த கவிஞர்களுக்கு பாவேந்தர் விருது வழங்கப்படுகிறது.

v  அறிஞர் அண்ணாவின் முயற்சியால் ரூ.2500 பொற்கிழியும் புரட்சிக்கவிஞர் என்ற விருதையையும் 1946 ல் பெற்றார்.

v  திரு.வி.க“எனக்கு குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழுவும் இனிக்கும், பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்.”

v  சிதம்பரநாத செட்டியார்அவருடைய பாடல்களை படிக்கின்ற அன்னியனும் தமிழனாகி விடுவான்.

v  புதுமைபித்தன்அறிவுக் கோவிலைக் கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற அறிஞன்.

v  ராஜகோபாலன்பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள ஓர் உண்மையான கவிஞன்.

Tuesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 - Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 1 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 1

துணைப்பாடம்      (Source TN Textbook)

கடைசிவரை நம்பிக்கை

 

    ஒரு சிறுமியின் உண்மை வரலாறு இது. அவள் பெயர் சடகோ. முழுப் பெயர் சடகோ சசாகி. அவள் ஜப்பான் நாட்டுச் சிறுமி.

 

   ஜப்பானில் இரு இடங்களில் அமெரிக்கா குண்டு வீசியது. ஒன்று ஹிரோசிமா; மற்றொன்று நாகசாகி. அக் குண்டுவீச்சில் இரண்டு இலட்சம் ஜப்பானியர் இறந்தனர்.

 

   ஹிரோசிமாவுக்கு அருகில் சடகோ, தன் பெற்றோருடன் வசித்து வந்தாள். அப்போது, அவளுக்கு இரண்டு வயது. குண்டுவீச்சில் அவள் குடும்பம் தப்பியது.

 

   சடகோ பள்ளியில் சேர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு 11 வயது ஆனது. ஒருநாள் பள்ளியில், அவள் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது, திடீரென மயங்கி விழுந்தாள். மருத்துவர் அவளைச் சோதித்துப் பார்த்தார். அவளுக்குப் புற்றுநோய்!

 

    அணுகுண்டு வெடித்தபோது உண்டான கதிர்வீச்சுதான் இதற்குக் காரணம். சடகோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். புற்றுநோய் ஆளைக் கொல்லும் என்று சடகோ தெரிந்து கொண்டாள்.

 

   ஆனால், சடகோ சாக விரும்பவில்லை; உயிர்வாழவே ஆசைப்பட்டாள். ஒருநாள் சிசுகோ என்ற தோழி, அவளைப் பார்க்க வந்தாள். சிசுகோ கை நிறைய காகிதங்கள் எடுத்து வந்தாள். அந்தக் காகிதங்கள் சதுரம் சதுரமாக வெட்டப்பட்டு இருந்தன. ஒரு காகிதத்தைச் சிசுகோ எடுத்தாள். அப்படியும் இப்படியும் காகிதத்தை மடக்கி கொக்கு ஒன்று செய்தாள். ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு. சிசுகோ, சடகோவைப் பார்த்து, ‘’கவலைப்படாதே! நான் செய்ததுபோல் ஆயிரம் கொக்குகள் செய். நோய் குணமாகும். இது நம் நாட்டு நம்பிக்கை’’ என்று கூறினாள்.

 

  சடகோவுக்கு நம்பிக்கை கிடைத்தது; துணிச்சல் பிறந்தது. நாள்தோறும் கொக்குகள் செய்யத் தொடங்கினாள். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு இருபது கொக்குகள் செய்தாள். போகப்போக உடம்பில் வலிமை குன்றியது. அவளால், ஒரு நாளைக்கு மூன்று கொக்குகள்கூடச் செய்ய இயலவில்லை. தன்னை மரணம் நெருங்கிவிட்டதனை உணர்ந்தாள். ஆனாலும், அவள் காகிதக் கொக்கு செய்வதனை மட்டும் நிறுத்தவே இல்லை. கொக்கு செய்யும்போது, அவள் கவலையை மறந்திருந்தாள்.

 

   ஒருநாள், அவளால் ஒரு கொக்கு மட்டுமே செய்ய முடிந்தது. அதன்பிறகு, அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. 1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் சடகோ இறந்துவிட்டாள்.

 

   சடகோவின் படுக்கை முழுவதும் காகிதக் கொக்குகள் இருந்தன. மொத்தம் அறுநூற்று நாற்பத்து நான்கு கொக்குகள் இருந்தன. ஆயிரம் கொக்குகளுக்கு இன்னும் முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் வேண்டும். தோழிகள் கூடி முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் செய்தனர்; எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.

 

   தன் வாழ்நாளின் இறுதிவரை நம்பிக்கையுடன் வாழ்ந்தவள் சடகோ. தான் தொடங்கிய செயலை, அவள் நிறுத்தவே இல்லை.

 

    அவளுக்கு ஒரு நினைவாலயம் கட்ட வேண்டுமென்று தோழிகள் நினைத்தார்கள். அதற்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். ஹிரோசிமா நகரின் மையத்தில் நினைவாலயம் கட்டினார்கள். அதனுள் சடகோவுக்குச் சிலை வைத்தார்கள். அதற்குக் குழந்தைகள் அமைதி நினைவாலயம் என்று பெயர் சூட்டினார்கள்.

 

   நினைவாலயத்தில் பின்வருமாறு எழுதி வைத்தார்கள்.

 

    உலகத்தில் அமைதி வேண்டும்!

    இஃது எங்கள் கதறல்! இஃது எங்கள் வேண்டுதல்!

 

(நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அந்த நினைவாலயம் வருகின்றனர். சடகோ சிலைக்குக் காகிதக் கொக்குகள் செய்து வணங்குகின்றனர்.)

 

   நன்றி: அரவிந்த குப்தா எழுதிய ‘டென் லிட்டில் பிங்கர்ஸ்’.

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 - Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 1 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 1

உரைநடை      (Source TN Textbook)

தமிழ்த்தாத்தா உ.வே.சா.

 

‘’ஐயா... ஐயா...’’

 

   வெளியில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு வீட்டுக்குள் இருந்த முதியவர் வாசலுக்கு வந்தார். யாரோ உதவி கேட்டுத்தான் வந்திருப்பார் என்று நினைத்து வந்தவருக்கு வியப்பு. வாசலில் நின்றவரைப் பார்த்தால், அவர் பெரிய மனிதராகவும் நல்ல படிப்பாளியாகவும் தெரிந்தார். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு இருந்தது.

 

  ‘’என்ன வேண்டும்?’’ என்று வீட்டுக்காரர் கேட்டார்.

 

  ‘’தங்கள் வீட்டில் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டு வந்தேன். அவற்றில், தமிழ்மொழியின் சிறந்த இலக்கியங்கள் இருக்கலாம். ஓலைச்சுவடியில் உள்ளனவற்றை எல்லாம் எழுதிப் புத்தகமாக அச்சிட்டு வருகிறேன். உங்கள் வீட்டில் உள்ள சுவடிகளைக் கொடுத்தால், அவற்றைப் பார்த்து எழுதிவிட்டுத் திருப்பித் தந்துவிடுவேன். இந்த உதவியை மறுக்காமல் தாங்கள் செய்தல் வேண்டும்’’ என்று வந்த பெரியவர் கூறினார்.

 

  இதனைக் கேட்ட வீட்டுக்காரருக்குச் சினம் வந்துவிட்டது.

 

  ‘’நாளை ஆடிப்பெருக்கு. விடியற்காலையில் ஆற்றில் விடுவதற்காக வீட்டில் கொஞ்சம் ஓலைச்சுவடிகள் வைத்திருக்கிறேன். அது பொறுக்கவில்லையா உமக்கு?’’ என்று கத்தினார்.

 

   ‘’ஓலைச்சுவடிகளைப் படிக்கவேண்டுமே தவிர, அவற்றை ஏன் ஆற்றில் விடவேண்டும்...?’’ என்று வந்தவர் கேட்டார்.

 

   வீட்டுக்காரர் மேலும் சினம் கொண்டார். ‘’அஃது உமக்குத் தேவையில்லாதது. ஆடிப்பெருக்கு நாளில் சுவடிகளை ஆற்றில் விட்டால் புண்ணியம் என்பது சாத்திரம். அவற்றை எல்லாம் கொடுக்கக்கூடாது’’ எனக் கூறி, வந்தவரை விரட்டினார்.

 

   பெரியவர், வீட்டுக்காரரிடம் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும், அவர் ஓலைச்சுவடிகளைத் தர ஒத்துக்கொள்ளவில்லை. வந்தவரோ அதற்காக மனம் தளரவில்லை; அந்த ஊரைவிட்டும் செல்லவில்லை. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல், அன்றிரவு வேறொரு வீட்டுத்திண்ணையில் படுத்துக்கொண்டார். குளிரும் பனியும் அவரை வாட்டின.

 

   விடியற்காலையில் கோழி கூவியதும் அந்த வீட்டுக்காரர் ஓலைச்சுவடிகளுடன் ஆற்றுக்குச் செல்வதனைப் பார்த்தார் அந்த பெரியவர்; அவரைப் பின்தொடர்ந்து மறைந்து மறைந்து சென்று, ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதனை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

 

   வீட்டுக்காரர் நீராடியபின், ஓலைச்சுவடிகளை ஆற்றில்விட்டுச் சென்றார். அவர் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை அப்பெரியவர் தேடி எடுத்தார். அவற்றில் இருந்த ஈரத்தைத் தன் வேட்டியால் துடைத்தார். அங்கேயே சுவடிகளை வாசிக்கத் தொடங்கினார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் தேடித்தேடி அலைந்த அருந்தமிழ் இலக்கியங்கள் சில அச்சுவடிகளில் இருந்தன. (இந்த நிகழ்வு இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் நடைப்பெற்றது.) அந்தப் பெரியவரே உ.வே.சாமிநாதர்.

 

    அந்தக் காலத்தில் தாளோ எழுதுகோலோ இல்லை. பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு ‘ஓலைச்சுவடி’ என்று பெயர். அக்காலத்தில் இலக்கியங்களும் இலக்கணங்களும் ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டன. ஆணியால் ஓலையில் எழுதும்போது, ஓலை கிழியாமல் எழுதுதல் வேண்டும். அதனால், ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது. பேரன் என்பதனைப் பெரன என்றும் வாசிக்கலாம். பேரன என்றும் வாசிக்கலாம். முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

 

    பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதற்காக, உ.வே.சா. வெவ்வேறு சுவடிகளை வைத்துப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே, அவற்றை அச்சுக்கு அனுப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட சுவடிகளை வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி, அச்சிட்டுப் புத்தகமாக வழங்கினார் உ.வே.சாமிநாதர். நாம் அவ்விலக்கியங்களைப் படிப்பதற்காக அவர் ஓய்வின்றி உழைத்தார். அதனால், அவரைத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. என்று அன்போடும் உரிமையோடும் நாம் அழைக்கிறோம்.

 

     ‘குறிஞ்சிப்பாட்டு’ என்னும் சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக எழுதிக் கொண்டிருந்தார். அச்சுவடியில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன. அவற்றுள், தொண்ணூற்று ஆறு பூக்களுடைய பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தன; மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவாக இல்லை. ஆனால், மூன்றே மூன்று பூக்கள் தானே தெரியவில்லை என அவர் விட்டுவிடவில்லை. அந்தப் பூக்களின் பெயர்கள் தெளிவாக உள்ள சுவடி யாரிடமாவது இருக்காதா என்று மறுபடியும் ஊர்ஊராக, வீடுவீடாகத் தேடிச் சென்றார். (குறிஞ்சிப்பாட்டு – பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்) பல மாதங்கள் கழித்து, அவர் தேடிய பூக்களின் பெயர்கள் உள்ள சுவடி ஒன்று கிடைத்தது. அதன் பிறகே அந்நூலை அச்சுக்குக் கொடுத்தார். எதனையும் அரைகுறையாகச் செய்ய விரும்பாத சுறுசுறுப்பான அந்தத் தாத்தா, தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியை மேற்கொண்டார்.

 

   அவர் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம். அவருடைய இயற்பெயர் வேங்கடரத்தினம். அவருடைய ஆசிரியரின் பெயர் மகாவித்துவான்மீனாட்சிசுந்தரம். அவருடைய ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன். அதனால் அவர், உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன் என்பதன் சுருக்கமாகவே உ.வே.சா. என்று அழைக்கப்பட்டார். 19.02.1855 ஆம் ஆண்டு பிறந்த அவர், 28.04.1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

    தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

 

   அவர் தொடங்கிய தமிழ்ப்பணி இன்னும் முழுமை அடையவில்லை. அவருடைய பேரப்பிள்ளைகளான நாமும் அப்பணியைத் தொடர்வோம்.

 

சிறப்புக் குறிப்புகள்

 

v  உ.வே.சா அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

v  உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

v  நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.  

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....