Showing posts with label Eravanakaviyam. Show all posts
Showing posts with label Eravanakaviyam. Show all posts

Wednesday

TNPSC Tamil - இராவண காவியம்

 

இராவண காவியம் (Source TN Textbook)

       குறிஞ்சி

1. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி

பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்

அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை

மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்.

பாடல் விளக்கம்:

     அருவிகள் பறையாய் ஒலிக்கும்; பைங்கிளி தானறிந்த தமிழிசையைப் பாடும்; பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்; இக்காட்சியினைப் பூக்கள் நிறைந்தை மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.

2. அடுப்பிடு சாந்தமோடு அகலின் நாற்றமும்

துடுப்பிடு மைவனச் சோற்றின் நாற்றமும்

மடுப்பிடு காந்தளின் மணமுந் தோய்தலாற்

கடைப்படு பொருளெலாம் கமழும் குன்றமே.

பாடல் விளக்கம்:

    தீயில் இட்ட சந்தனமரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

         முல்லை

3. பூவையும் குயில்களும் பொலங்கை வண்டரும்

பாஇசை பாடமுப் பழமும் தேனும்தந்

தேஇசை பெறும்கடறு இடையர் முக்குழல்

ஆவினம் ஒருங்குற அருகுஅ ணைக்குமால்.

பாடல் விளக்கம்:

      நாகணவாய்ப் பறவைகளும் குயில்களும் அழகுமிக்க  வண்டுகளும் பாவிசைத்துப் பாடின. புகழ்பெற்ற முல்லை நில மக்களான ஆயர், முக்கனியும் தேனும் சேகரித்துக் கொண்டு முக்குழல் இசையால் மேயும் பசுக் கூட்டங்கள் ஒன்று சேர்த்தனர்.

 

4. முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக்

குதிரைவா லியும்களம் குவித்துக் குன்றுஎனப்

பொதுவர்கள் பொலிஉறப் போர்அ டித்திடும்

அதிர்குரல் கேட்டுஉழை அஞ்சி ஓடுமே!

பாடல் விளக்கம்:

      முதிரை, சாமை, கேழ்வரகு, மணி போன்ற குதிரைவாலி நெல் ஆகியவற்றை முல்லை நிலை மக்களை அறுத்துக் கதிரடித்துக் களத்தில் குன்று போல குவித்து வைத்திருப்பர். கதிரடிக்கும் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.

         பாலை

5. மன்னிய முதுவெயில் வளைப்ப வாய்வெரீஇ

இன்னிளம் குருளைமிக்கு இனைந்து வெம்பிடத்

தன்னிழல் தங்கவே தாய்மை மீதுற

நன்னரில் வலியசெந் நாய்உய ங்குமே.

பாடல் விளக்கம்:

     கொடிய பாலைநிலத்து வெயிலின் வெப்பத்தை தாங்க இயலாத செந்நாய்க்குட்டி,வாய் மிகவும் உலர்ந்து குழறியது. இதனைக் கண்டு அதன் தாய் வருந்தியது. குட்டி இளைப்பாற எங்கும் நிழலில்லை. எனவே கடும் வெயிலில் தான் துன்புற்று நின்று, தனது நிழலில் குட்டியை இளைப்பாறச் செய்தது.

      

6. கடிக்கமழ் மராமலர்க் கண்ணி அம்சிறார்

படிக்குற எருத்துக்கோடு அன்ன பாலைக்காய்

வெடிக்கவிட்டு ஆடிட விரும்பிக் கோலினால்

அடிக்கும் ஓசையின்பருந்து அஞ்சி ஓடுமே.

பாடல் விளக்கம்:

          சிறுவர்கள் நன்கு மணம் வீசும் மராமலர்களை மாலையாக அணிந்திருந்தனர். எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக்காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின. 

          மருதம்

7. கல்லிடைப் பிறந்த ஆறும்

கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று

முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

வஞ்சியும் மருதம் பூக்கும்.

பாடல் விளக்கம்:

      மலையிடையே தோன்றும் ஆறும் கரையை மோதிக் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்தோடும்; அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும். பெருகி வரும் நீரீனைக் கால்வாய்வழி வயலில் தேக்கி வளம் பெருக்கும். இத்தகு வளம் நிறைந்த மருதநில வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

 

8. மரைமலர்க் குளத்தில் ஆடும்

மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட

பொருகரிக் குருத்து அளந்து

பொம்மெனக் களிப்பர் ஓர்பால்

குரைகழல் சிறுவர் போரில்

குலுங்கியே தெங்கின் காயைப்

புரைதபப் பறித்துக் காஞ்சிப்

புனைநிழல்அருந்து வாரே.

பாடல் விளக்கம்:

    தாமரை மலர்கள் பூத்திருந்த குளத்தில் சிறுவர்கள் நீராடினர். அக்குளத்தில் நீந்தும் யானையின் தந்தங்களை அளந்து பார்த்து, அதன் வடிவழகு கண்டு மகிழ்ந்தனர். சிறுகழல் அணிந்த சிறார்கள் வைக்கோற் போர் குலுங்கிடும்படி ஏறி, தென்னை இளநீர்க் காய்களைப் பறித்தனர். பின்னர்க் காஞ்சி மர நிழலில் அமர்ந்து அருந்தினர்.

          நெய்தல்

9. பசிபட ஒருவன் வாடப்

பார்த்துஇனி இருக்கும் கீழ்மை

முசிபட ஒழுகும் தூய

முறையினைஅறிவார் போல

வசிபட முதுநீர் புக்கு

மலையெனத் துவரை நன்னீர்

கசிபட ஒளிமுத் தோடு

கரையினில் குவிப்பார் அம்மா.

பாடல் விளக்கம்:

   தூய ஒழுக்கமுறையைப் பின்பற்றுபவர்கள், பசித்துயரால் துன்புறுவோரைக் கண்டு வருந்துவார்கள். அதுபோலத் தான் வாழும் இடமானது மூழ்குமாறு பெரும் கடலலை புகுந்து விட்டாலும், மலையளவுக்குப் பவளங்களையும் நல் இயல்பு தோன்றும் ஒளி முத்துகளையும் நெய்தல் நிலத்தவர் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பர்.

 

1௦. வருமலை அளவிக் கானல்

மணலிடை உலவிக் காற்றில்

சுரிகுழல் உலர்த்தும் தும்பி

தொடர்மரை முகத்தர் தோற்றம்

இருபெரு விசும்பிற் செல்லும்

இளமைதீர் மதியம் தன்னைக்

கருமுகில் தொடர்ந்து செல்லுங்

காட்சி போல்தோன்று மாதோ

பாடல் விளக்கம்:

    தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்ப் பெண்களின் முகத்தைத் தாமரை மலரெனக் கருதித் தொடர்ந்து செல்லும் அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....