Tuesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 - Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 1 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 1

துணைப்பாடம்      (Source TN Textbook)

கடைசிவரை நம்பிக்கை

 

    ஒரு சிறுமியின் உண்மை வரலாறு இது. அவள் பெயர் சடகோ. முழுப் பெயர் சடகோ சசாகி. அவள் ஜப்பான் நாட்டுச் சிறுமி.

 

   ஜப்பானில் இரு இடங்களில் அமெரிக்கா குண்டு வீசியது. ஒன்று ஹிரோசிமா; மற்றொன்று நாகசாகி. அக் குண்டுவீச்சில் இரண்டு இலட்சம் ஜப்பானியர் இறந்தனர்.

 

   ஹிரோசிமாவுக்கு அருகில் சடகோ, தன் பெற்றோருடன் வசித்து வந்தாள். அப்போது, அவளுக்கு இரண்டு வயது. குண்டுவீச்சில் அவள் குடும்பம் தப்பியது.

 

   சடகோ பள்ளியில் சேர்ந்து படித்து வந்தாள். அவளுக்கு 11 வயது ஆனது. ஒருநாள் பள்ளியில், அவள் விளையாடிக்கொண்டு இருந்தாள். அப்போது, திடீரென மயங்கி விழுந்தாள். மருத்துவர் அவளைச் சோதித்துப் பார்த்தார். அவளுக்குப் புற்றுநோய்!

 

    அணுகுண்டு வெடித்தபோது உண்டான கதிர்வீச்சுதான் இதற்குக் காரணம். சடகோவை மருத்துவமனையில் சேர்த்தார்கள். புற்றுநோய் ஆளைக் கொல்லும் என்று சடகோ தெரிந்து கொண்டாள்.

 

   ஆனால், சடகோ சாக விரும்பவில்லை; உயிர்வாழவே ஆசைப்பட்டாள். ஒருநாள் சிசுகோ என்ற தோழி, அவளைப் பார்க்க வந்தாள். சிசுகோ கை நிறைய காகிதங்கள் எடுத்து வந்தாள். அந்தக் காகிதங்கள் சதுரம் சதுரமாக வெட்டப்பட்டு இருந்தன. ஒரு காகிதத்தைச் சிசுகோ எடுத்தாள். அப்படியும் இப்படியும் காகிதத்தை மடக்கி கொக்கு ஒன்று செய்தாள். ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு. சிசுகோ, சடகோவைப் பார்த்து, ‘’கவலைப்படாதே! நான் செய்ததுபோல் ஆயிரம் கொக்குகள் செய். நோய் குணமாகும். இது நம் நாட்டு நம்பிக்கை’’ என்று கூறினாள்.

 

  சடகோவுக்கு நம்பிக்கை கிடைத்தது; துணிச்சல் பிறந்தது. நாள்தோறும் கொக்குகள் செய்யத் தொடங்கினாள். தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு இருபது கொக்குகள் செய்தாள். போகப்போக உடம்பில் வலிமை குன்றியது. அவளால், ஒரு நாளைக்கு மூன்று கொக்குகள்கூடச் செய்ய இயலவில்லை. தன்னை மரணம் நெருங்கிவிட்டதனை உணர்ந்தாள். ஆனாலும், அவள் காகிதக் கொக்கு செய்வதனை மட்டும் நிறுத்தவே இல்லை. கொக்கு செய்யும்போது, அவள் கவலையை மறந்திருந்தாள்.

 

   ஒருநாள், அவளால் ஒரு கொக்கு மட்டுமே செய்ய முடிந்தது. அதன்பிறகு, அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. 1955ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் நாள் சடகோ இறந்துவிட்டாள்.

 

   சடகோவின் படுக்கை முழுவதும் காகிதக் கொக்குகள் இருந்தன. மொத்தம் அறுநூற்று நாற்பத்து நான்கு கொக்குகள் இருந்தன. ஆயிரம் கொக்குகளுக்கு இன்னும் முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் வேண்டும். தோழிகள் கூடி முந்நூற்று ஐம்பத்தாறு கொக்குகள் செய்தனர்; எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.

 

   தன் வாழ்நாளின் இறுதிவரை நம்பிக்கையுடன் வாழ்ந்தவள் சடகோ. தான் தொடங்கிய செயலை, அவள் நிறுத்தவே இல்லை.

 

    அவளுக்கு ஒரு நினைவாலயம் கட்ட வேண்டுமென்று தோழிகள் நினைத்தார்கள். அதற்காகப் பொதுமக்களிடம் நிதி திரட்டினார்கள். ஹிரோசிமா நகரின் மையத்தில் நினைவாலயம் கட்டினார்கள். அதனுள் சடகோவுக்குச் சிலை வைத்தார்கள். அதற்குக் குழந்தைகள் அமைதி நினைவாலயம் என்று பெயர் சூட்டினார்கள்.

 

   நினைவாலயத்தில் பின்வருமாறு எழுதி வைத்தார்கள்.

 

    உலகத்தில் அமைதி வேண்டும்!

    இஃது எங்கள் கதறல்! இஃது எங்கள் வேண்டுதல்!

 

(நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அந்த நினைவாலயம் வருகின்றனர். சடகோ சிலைக்குக் காகிதக் கொக்குகள் செய்து வணங்குகின்றனர்.)

 

   நன்றி: அரவிந்த குப்தா எழுதிய ‘டென் லிட்டில் பிங்கர்ஸ்’.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...