Latest Government Jobs and updates

Thursday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 7ம் வகுப்பு - இயல் 1 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 

         7ம் வகுப்பு

           இயல் 1

செய்யுள்  (Source TN Textbook)

வாழ்த்து

பண்ணினை இயற்கை வைத்த                                         பண்பனே போற்றி போற்றி                                        பெண்மையில் தாய்மை வைத்த                                        பெரியனே போற்றி போற்றி                                              வண்மையை உயிரில்வைத்த                                             வள்ளலே போற்றி போற்றி                                         உண்மையில் இருக்கை வைத்த                                        உறவனே போற்றி போற்றி.

பொருள்:                                                                         இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மைபால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே! கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன்.

சொற்பொருள்:                                                               பண் – இசை;                                                                 வண்மை – கொடைத்தன்மை;                                       போற்றி – வாழ்த்துகிறேன்.

ஆசிரியர் குறிப்பு

பெயர்:

திரு.வி.கலியாணாசுந்தரனார் (திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது.)

பெற்றோர்:

  விருத்தாசலனார் – சின்னம்மையார்.

பிறந்த ஊர்:

  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு:

   இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

பணி:

  சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

படைப்புகள்:

  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலியன.

காலம்:

26.08.1883 – 17.09.1953

நூல் குறிப்பு:

    வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமை வேட்டல். தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

நூல் பயன்:

    இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும்; மனித நேயம் மலரும்; உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.

 திருக்குறள்

வாய்மை

அறத்துப்பால்

அதிகாரம்(30)

அறம்-துறவறவியல்

 1.வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

விளக்கம்: வாய்மை என்பது மற்றவர்களுக்கு தீமை பயக்கும் சொற்களை பேசாமல் நன்மை செய்வதே ஆகும்.

 

2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

விளக்கம்: ஒருவனுக்கு பொய்யான ஒன்றை கூறி அவனுக்கு நன்மை பயக்கும் என்றால் அதுவே வாய்மை எனப்படும்.

 

3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம்: ஒருவன் மனசாட்சிக்கு விரோதமாக பொய் கூறினால்,அதுவே அவன் நெஞ்சை வருந்தி கொண்டிருக்கும்.

 

4.உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

விளக்கம்: ஒருவன் பொய் கூறாது வாழ்ந்தால் அவனை இவ்வுலகம் பாராட்டும்,எல்லார் உள்ளங்களிலும் இருப்பான்.

 

5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை.

விளக்கம்: உள்ளத்திலும்,பேச்சிலும் தூய்மையாக இருப்பவரை தானம் தவம் செய்பவரைக் காட்டிலும் உயர்வாகக் கருதுவர்.

 

6.பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.

விளக்கம்: ஒருவன் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருந்தால்,அவனுக்கு புகழும் நன்மையும் வந்து சேரும்.

 

7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம்: பொய் சொல்லாது வாழ்ந்தால்,தான தருமங்கள் செய்யாமல் எல்லா அறங்களும் ஒரு சேர வந்து விடும்.

 

8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

விளக்கம்: உடம்பு நீரால் தூய்மை அடையும்.அதுபோல,மனம் வாய்மையால் தூய்மை அடையும்.

 

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம்: விளக்கானது இருளை நீக்கி வெளிச்சைத்தைத் தருவது போல,வாய்மை என்னும் விளக்கு சான்றோர்க்கு நல்ல புகழை தரும்.

 

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

விளக்கம்: உண்மை பேசுவதே இவ்வுலகில் பெரிய அறமாகக் கருதப்படுகிறது.அதுவே வாய்மையின் தலைமைப்பண்பாக  விளங்குகிறது.

No comments:

Post a Comment