Latest Government Jobs and updates

Sunday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 9 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 9


உரைநடை 
  (Source TN Textbook)

எது பண்பாடு

(கூடிப் பேசுவோம் வாங்க...)

நிகழ்வு – 1

    செந்திலைப் பார்த்திருக்கிறீர்களா? ஆறாம் வகுப்புப் படிக்கிறான்; அவன் படுசுட்டி; ஓர் இடத்தில் நிற்கமாட்டான்; எப்போதும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருப்பான்.

 

     அவனிடம் ஒரு பழக்கம் உண்டு. நடக்கும்போதே வழியெல்லாம் எச்சிலைத் துப்புவான். யாராவது கேட்டால், “உனக்கென்ன?” என்பான்.

 

   தட்டிக்கேட்டால், அவனுக்குச் சினம் வரும். ஆனால், எச்சில் துப்புவதனை மட்டும் நிறுத்தவே மாட்டான். இவ்வாறு எச்சில் துப்புவதனால், காற்றில் நோய் உயிரிகள் பரவி, மற்றவர்களுக்கும் நோய்வர வாய்ப்புகள் உண்டு எனக் கூறியும் துப்புகிறான்.

 

கூடிப் பேசுவோம்

     செந்தில் செய்வது முறையா?

 

     பொது இடங்களில் எச்சில் துப்பினால் என்னென்ன கெடுதல் வரும்?

 

     ‘எச்சிலை எங்கே துப்பினால் என்ன?’ எனக் கேட்கும் செந்திலுக்கு உங்கள் பதில் என்ன? உன்னுடன் வருவோர் எச்சில் துப்பினால், அவர்களுக்கு நீ எவ்வாறு எடுத்துரைப்பாய்?

 

நிகழ்வு – 2

     சுந்தரத்தின் அப்பா பெயர் பழனி. ஆனால், எல்லாருக்கும் ‘நன்றிபழனி’ என்றால்தான் உடனே தெரியும். அஃதென்ன... ‘நன்றிபழனி...’? யாரிடம் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் உடனே ‘நன்றி’ சொல்கிற பழக்கம் உடையவர் பழனி.

 

      ஒருநாளைக்கு ஆயிரம் தடவையாவது, ‘நன்றி’ என்னும் சொல்லைப் பயன்படுத்திவிடுவார்.

 

     பேருந்தில் நடத்துநர் பயணச்சீட்டுக் கொடுப்பார்; பழனி ‘நன்றி’ என்பார். அஞ்சல்காரர் பழனியிடம் கடிதம் கொடுப்பார், அதற்கும் ‘நன்றி ஐயா’ என்பார்.

 

    சுந்தரம், அப்பாவிற்குத் தண்ணீர் கொடுப்பான்; அதற்கும் ‘நன்றி’ சொல்வார் பழனி.

 

கூடிப் பேசுவோம்

     எதற்கெடுத்தாலும், ‘நன்றி’ சொல்கிற பழக்கம் உடையவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

 

     ‘நன்றி’ என்பது வெறும் சொல்தானே, அதனைச் சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன என்று நினைக்கிறீர்களா?

 

    யாருக்காவது நீங்கள் ‘நன்றி’ சொன்னது உண்டா?

 

    ‘மகிழ்ச்சி’ என்னும் சொல்லை எங்கெங்கு எல்லாம் பயன்படுத்தலாம் என நண்பர்களுடன் கலந்துரையாடுக.

 

நிகழ்வு – 3

  அந்த வரிசை நீண்டிருந்தது. ஒரே கூட்டம்.

  ஆண்களும் பெண்களும் கலந்து ஒரே வரிசையில் நின்றிருந்தார்கள்.

  மேலிருந்து பார்த்தால் பெரிய மலைப்பாம்பு படுத்திருப்பதுபோல் வரிசை தெரியும்.

   கதவு திறக்கட்டும் என எல்லாரும் காத்திருந்தனர்.

   முத்து அங்கே வந்தான்; ஆள் நல்ல உயரம்; கையைக் கட்டிக்கொண்டு சிறிதுநேரம் வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

   அவன் வரிசையில் நிற்கவில்லை.

   கதவு திறந்ததும் விரைவாய் முன்னால் ஓடினான், முத்து.

   கூட்டத்தில் இருந்த சிலர் சொன்னார்கள்.

   “யாரப்பா அது? நாங்கள் வரிசையில் நிற்கிறோமே, தெரியலயா!”

    முத்து, முறைத்தபடி கூட்டத்தைப் பார்த்துச் சொன்னான்:

    “உங்க வேலையைப் பாருங்க. எல்லாம் எனக்குத் தெரியும்.”

  இன்னும் சிலர் சொன்னார்கள்.

  “நமக்கு எதுக்கு வம்பு? போனா போயிட்டுப் போறான்.”

  ஒருவர் உரக்கச் சொன்னார்.

  “இப்படியே வர்றவங்க முன்னால போனா, நாம எப்போ போறது?

   இதனை யார்தான் கேட்பது?”

 

கூடிப் பேசுவோம்

     முத்து செய்தது முறைதானா?

     மக்கள் நீள்வரிசையில் நின்றிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

     ஆண், பெண் எனத் தனித்தனி வரிசை தேவையா? எங்கெங்கு எல்லாம் வரிசைமுறையைப் பின்பற்றுதல் வேண்டும்? ஏன்? வரிசைமுறையை மீறிச் செல்பவரைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

 

நிகழ்வு – 4

     செண்பகத்தின் அப்பா எல்லாரையும் ‘அவன்’, ‘இவன்’ என்றுதான் அழைப்பார். சாலையில் போகும் காய்கறிக்காரரை, ‘ஏய், காய்கறி’ என்று அழைப்பார்.

   

      வீட்டிற்கு வரும் தோட்டக்காரர் மாணிக்கத்தைத், “தோட்டக்காரா... இங்கே வா!” என்று அப்பா கூப்பிடுவார்; நாள்தோறும் வீட்டிற்குச் செய்தித்தாள் போடுபவரை, “பேப்பர்காரன்” என்றுதான் சொல்வார்.

 

     இதில் அப்பாவுக்கு நேர் எதிரானவர் அம்மா. வயதில் குறைந்தவர்களைக்கூட ‘வாங்க,போங்க’ என்றுதான் சொல்வார்.

 

    செய்யும் தொழிலை வைத்து ஒருவரை மரியாதைக் குறைவாகக் கூப்பிடுவது அம்மாவுக்குப் பிடிக்காது.

 

    அப்பா பிறரைக் கூப்பிடுவதனைப் பார்த்த செண்பகமும் ஒருநாள் மாணிக்கத்தைத், “தோட்டக்காரா... இங்கே வா!” என்று கூப்பிட்டாள்.

 

    அம்மா அதட்டினாள். “பெரியவங்களை அப்படிக் கூப்பிடக் கூடாது, தெரியுதா?”

   

    செண்பகம் பதிலுக்குக் கேட்டாள். “அப்பா மட்டும் அப்படிக் கூப்பிடலாமா?”

 

   ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கலாமா?

   வயதில் பெரியவர்களை வா, போ என ஒருமையில் பேசலாமா?

   உங்களைப் பெயர் சொல்லி அழைத்தால், மகிழ்ச்சியாக இருக்கிறதா?

    ‘ஏய்... இங்கே வா’ எனப் பெயர் கூறாமல் அழைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறதா?

 

  சமுதாயம் என்பது நாம்தாமே. நாம் ஒவ்வொருவரும் பண்புடன் நடக்கும்போது, சமுதாயமே பண்பாடுமிக்க சமுதாயமாக மாறிவிடும். நாம்தாம் நல்ல பண்பாட்டை உருவாக்குதல் வேண்டும். அதற்கு, நமக்குள் உறுதியான நல்ல மனப்பான்மை வேண்டும். கடைப்பிடிப்போம்; நல்ல பண்புமிக்க சமுதாயத்தை உருவாக்குவோம்.

No comments:

Post a Comment