Latest Government Jobs and updates

Tuesday

TNPSC Tamil - சிற்றிலக்கியங்கள் - முத்தொள்ளாயிரம்

 

 சிற்றிலக்கியங்கள்

முத்தொள்ளாயிரம்      (Source TN Textbook)

 

1. சேரநாடு

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.

2. சோழநாடு

காவல் உழவர் களத்துஅகத்துப் போர் ஏறி

நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை காவலன்தன்

கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே

நல்யானைக் கோக்கிள்ளி நாடு.

3. பாண்டியநாடு

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்

பந்தர் இளங்கமுகின் பாளையும் - சிந்தித்

திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்

   நகைமுத்த வெண்குடையான் நாடு.

பாடல் விளக்கம்:

      1. சேறுபட்ட நீர்மிக்க வயல்களில் அரக்கு நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன. அதைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன. அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்ட சேரனின் நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே.

         2. நெல்லை அறுவடை செய்து காக்கும் உழவர்கள் நெற்போர் மீதேறி நின்றுகொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ’ என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானை மீது ஏறி நின்றுகொண்டு மற்ற வீரர்களை ‘நாவலோ’ என்று அழைப்பது போலிருந்தது. யானைப்படைகளை உடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது.

      3. சங்குகள் மணலில் ஈனுகின்ற முட்டைகள் முத்துகள் போலிருக்கின்றன. தரையில் உதிர்ந்துகிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன. பந்தல் போட்டதுபோல் தோன்றும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன. முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியனது நாடு இத்தகைய முத்து வளம்மிக்கது.

No comments:

Post a Comment