Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil - எட்டுத்தொகை - அகநானூறு

 

எட்டுத்தொகை - அகநானூறு  (Source TN Textbook)

1. உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்

புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ

இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி

விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட

கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்

மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய

 

பாடல் விளக்கம்:

        உலகம் புடைபெயர்ந்தது போன்ற அழகு  பொருந்திய தோற்றத்தை உடையது நாவாய். அது புலால் நாற்றமுடைய அலைவீசும் பெரிய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும். இரவும் பகலும் ஓரிடத்தும் தங்காமல் வீசுகின்ற காற்றானது நாவாயை அசைத்துச் செலுத்தும். உயர்ந்த கரையை உடைய மணல் நிறைந்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒளியால் திசை அறிந்து நாவாய் ஓட்டுபவன் நாவாயைச் செலுத்துவான்.

  

2. பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்

இருங்கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி

என்றூழ் விடர குன்றம் போகும்

கதழ்கோல் உமணர் காதல் மடமகள்

சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி

நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்

சேரி விலைமாறு கூறலின் மனைய

விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய

மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு,

இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்

மாமூது அள்ளல் அழுந்திய சாகாட்டு

எவ்வந் தீர வாங்குந் தந்தை

கைபூண் பகட்டின் வருந்தி

வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே.

பாடல் விளக்கம்:

 

     பரதவர், பெரிய கடல் பரப்பில் மீன் வேட்டையாடுவர். நிலப்பரப்பில் உப்பளங்களில் உழவு செய்யாமலே உப்பு விளைவிப்பர். அந்த வெண்ணிறக் கல்உப்பை, உப்பு வணிகர் தங்களது வண்டியில் ஏற்றிச்செல்வர். வண்டியில் பூட்டிய எருதுகளை விரட்டக் கையில் தாழ்கோல் வைத்திருப்பர். கோடைக்காலத்தின் வெப்பத்தால் பிளவுபட்ட பாறைக் குன்றைக் கடந்து தொலைவில் உள்ள ஊர்களில் விற்பனை செய்வர்.

      அத்தகைய உமணர் ஒருவரின் மகள், அழகும் இளமையும் வாய்ந்தவள். அவள் தன் கைகளில் அணிந்திருந்த அழகிய வளையல்கள் ஒலிக்கத் தெருவில் கைகளை வீசி நடந்து சென்றாள். அங்குஉப்புக்கு மாற்றாக நெல்லைத் தந்து உப்பினைப் பெற்றுக்கொள்ள வாரீரோ!’ என்று கூவினாள். அவள் கூவுவதைக் கேட்டு வீட்டில் உள்ள நாய் இது வேற்றுக் குரலென்று குரைத்தது. அதனை எதிர்பாராத அப்பெண்ணின் கண்கள் இரண்டும் அச்சத்தால் மீன்கள் தம்முள் போர் செய்வது போல் மருண்டன.

     மருண்ட அப்பெண்ணின் கண்களை நான் அங்குக் கண்டேன். புதிதாகத் தினைப்புனம் அமைக்கும் கானவர் பழையபுனத்தைத் தீயிட்டு எரிப்பர். அப்பொழுது உண்டாகும் கரும்புகை போன்ற கருஞ்சேற்றில் அப்பெண்ணுடைய தந்தையின், உப்பு ஏற்றிச்செல்லும் வண்டி சிக்கிக்கொண்டது. அவ்வண்டியைச் சேற்றிலிருந்து துன்பத்துடன் மீட்க முயன்ற எருதிற்கு அவள் தந்தை உதவிசெய்தார். அந்த எருது அடைந்த துன்பம் போல, அவள் கண்களால் நான் துன்புற்றேன்.

No comments:

Post a Comment