Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil - ஐம்பெருங்காப்பியங்கள் - சிலப்பதிகாரம்

 ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்  (Source TN Textbook)


1. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை    போன்றுறுஇவ்                                       

அங்கண் உலகு அளித்த லான்


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்                

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு              

மேரு வலம் திரிதலான்


மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்             

நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்    

மேல்நின்று தான் சுரத்தலான்.

பாடல் விளக்கம்:

          தேன் நிறைந்த ஆத்திமலர் மாலையை அணிந்தவன் சோழ மன்னன். அவனுடைய வெண்கொற்றக் குடை குளிர்ச்சி பொருந்தியது. அதைப் போலவே வெண்ணிலவும் தன் ஒளியால் உலகுக்கு இன்பம் அளிக்கிறது. அதனால் வெண்ணிலவைப் போற்றுவோம்.

       காவிரி ஆறு பாய்ந்து வளம் செய்யும் நாட்டை ஆட்சி செய்பவன் சோழ மன்னன். அவனது ஆணைச் சக்கரம் போல, கதிரவனும் பொன்போன்ற சிகரங்களையுடைய இமயமலையை வலப்புறமாகச் சுற்றிவருகிறது. அதனால் கதிரவனைப் போற்றுவோம்!

      அச்சம்தரும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிற்கு மன்னன் அருள் செய்கிறான். அதுபோல, மழை, வானிலிருந்து பொழிந்து மக்களைக் காக்கிறது. அதனால் மழையைப் போற்றுவோம்!



2. புகார்க் காண்டம் அரங்கேற்று காதை

மாதவியின் நாட்டியப் பயிற்சி

.....பெருந்தோள் மடந்தை

தாது அவிழ் புரிகுழல் மாதவி தன்னை

ஆடலும் பாடலும் அழகும் என்று இக்

கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்,

ஏழ் ஆண்டு இயற்றி, ஓர் ஈர்ஆறு ஆண்டில்

சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி

பாடல் விளக்கம்:

         மாதவி, அழகிய தோள்களை உடையவள்; தேனும் தாதுவும் நிறைந்த பூக்களை அணிந்த சுருண்ட கூந்தலை உடையவள்.

      ஆடல், பாடல், அழகு என்னும் இம்மூன்றில் ஒன்றும் குறைபடாமல் (ஐந்தாண்டில் ஆடல் கற்பதற்கான சடங்குகளைச் செய்து) ஏழு ஆண்டுவரை ஆடல் கலையைப் பயின்றாள். அவள் தனது பன்னிரண்டாவது வயதில் ஆடலை அரங்கேற்ற விரும்பினாள். (வீரக் கழல் பூண்ட சோழ மன்னனது அரசவைக்கு வந்தாள். அவளுடன் ஆடல் ஆசான், இசைஆசான், கவிஞன், தண்ணுமைஆசான், குழல் ஆசான், யாழ்ஆசான் ஆகியோரும் வந்திருந்தனர்).


3. நாட்டிய அரங்கின் அமைப்பு

 எண்ணிய நூலோர் இயல்பினில் வழாஅது      

மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு      

புண்ணிய நெடுவரைப் போகிய நெடும் கழைக்

கண்ணி்டை ஒருசாண் வளர்ந்தது கொண்டு   

நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்              

கோல் அளவு இருபத்து நால்விரல் ஆக,        

எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து        

ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி              

உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை             

வைத்த இடைநிலம் நால்கோல் ஆக                  

ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத்            

தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்                

பூதரை எழுதி மேல்நி்லை வைத்துத்            

தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்து; ஆங்கு 

ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்      

கரந்துவரல் எழினியும் புரிந்துஉடன் வகுத்து - ஆங்கு 

ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து         

மாலைத் தாமம் வளையுடன் நாற்றி          

விருந்துபடக் கிடந்த அரும்தொழில் அரங்கத்துப்

பாடல் விளக்கம்:

 

       திறம்படக் கற்றுணர்ந்த சிற்ப நூலாசிரியரால் சொல்லப்பட்ட இயல்புகளிலிருந்து மாறுபடாத நன்னிலத்தை, ஆடல் அரங்கிற்காகத் தேர்ந்தெடுத்தனர். பொதிகைமலை போன்ற மலைகளிலே நீண்டு வளர்ந்த மூங்கில்களிலே, ஒன்றுக்கொன்று இடையே ஒரு சாண் அளவு கணுக்களைக் கொண்ட மூங்கிலைக் கொண்டு வந்தனர். நூல்களில் கூறப்பட்ட முறையாலே அரங்கம் அமைத்தனர். தம் கைப்பெருவிரலில் இருபத்து நான்கு அளவினைக் கொண்டதாக அம்மூங்கிலை வெட்டினர். அதை அரங்கம் அமைக்கும் கோலாகக் கொண்டு அதில் ஏழுகோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் ஒரு கோல் உயரமும் உடையதாக நாட்டிய அரங்கத்தைஅமைத்தனர்.

அரங்கில் தூணிற்கு மேல் வைத்த உத்திரப்பலகைக்கும் தளத்தில் இருக்கும் பலகைக்கும் இடையே, இடைவெளி நான்கு கோல் அளவாக இருந்தது. அரங்கின் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஏற்றஅளவுகளுடன் இரு வாயில்கள் அழகாக அமைக்கப்பட்டிருந்தன. மேற்கூறியபடி அமைக்கப்பட்ட அவ்வரங்கில் மேல்நிலை மாடத்தில் ஐம்பூதங்களை யாவரும் புகழும்படி சித்தரித்து வைத்தனர். தூண்களின் நிழலானது, அவையிலும் நாடக அரங்கிலும் விழாதபடி நல்ல அழகான நிலைவிளக்குகளை நிறுத்தினர்.

        மேலும், மேடையின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்குச் செல்லுமாறு அமைக்கப்படும் ஒரு முகத்திரை, மேடையின் இரு புறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு அமைக்கப்படும் பொருமுகத்திரை, மேடையின் மேலிருந்து வேண்டும் போது கீழே இறக்கும் வகையில் அமைக்கப்படும் கரந்துவரல் திரை, இவை மூன்றையும் சிறப்புடன் அமைத்தனர். ஓவிய வேலைப்பாடுமிக்க மேல் விதானத்தையும் அமைத்தனர். அத்துடன் சிறந்த முத்துகளால் இயன்ற மாலைகளை அரங்கம் முழுவதும் தொங்கவிட்டனர். இவ்வாறு ஒவ்வொன்றையும் புதுமையாக, மேடையில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் அமைத்தனர்.

4. மருவூர்ப் பாக்கம்

வண்ணமும் சுண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

 

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

 

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

 

காழியர், கூவியர், கள்நொடை ஆட்டியர்,

மீன்விலைப் பரதவர், வெள்உப்புப் பகருநர்,

பாசவர், வாசவர், பல்நிண விலைஞரோடு

ஓசுநர் செறிந்த ஊன்மலி இருக்கையும்;

 

கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்

மரம்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்

 

கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்

துன்ன காரரும் தோலின் துன்னரும்

கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

பழுதுஇல் செய்வினைப் பால்கெழு மாக்களும்;

குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்

வழுவின்றி இசைத்து வழித்திறம் காட்டும்

அரும்பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும்;

 

சிறுகுறுங் கைவினைப் பிறர்வினை யாளரொடு

மறுஇன்றி விளங்கும் மருவூர்ப் பாக்கமும்

பாடல் விளக்கம்:

       புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து, பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

       இங்குப் பட்டு, முடி, பருத்திநூல், இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக் கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன. இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன. மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனை நடைபெறுகின்றது. எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

         மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர். மேலும் வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகரும் இங்கு வணிகம் செய்கின்றனர்.

         இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்லர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர். பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர்,

தோல்பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.

        இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன. குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (, ரி, , , , , நி என்னும் ஏழு சுரங்களை) குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன.

       இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன. இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.

No comments:

Post a Comment