Latest Government Jobs and updates

Monday

TNPSC Tamil - தேம்பாவணி

 

          தேம்பாவணி      (Source TN Textbook)

எலிசபெத் அம்மையார் அடக்கம், கருணையன் கண்ணீர்

1. பூக்கையைக் குவித்துப் பூவே

புரிவொ டு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

திருந்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கிப் பூவோடு

அழுங்கணீர் பொழிந்தான் மீதே.

2. வாய்மணி யாகக் கூறும்

வாய்மையே மழைநீ ராகித்

தாய்மணி யாக மார்பில்

தயங்கியுள் குளிர வாழ்ந்தேன்

தூய்மணி யாகத் தூவும்

துளியிலது இளங்கூழ் வாடிக்

காய்மணி யாகு முன்னர்க்

காய்ந்தெனக் காய்ந்தேன் அந்தோ .

 

3. விரிந்தன கொம்பில் கொய்த

வீயென உள்ளம் வாட

எரிந்தன நுதிநச்சு அம்புண்டு

இரும்புழைப் புண்போல் நோகப்

பிரிந்தன புள்ளின் கானில்

பெரிதழுது இரங்கித் தேம்பச்

சரிந்தன அசும்பில் செல்லும்

தடவிலா தனித்தேன் அந்தோ !

 

4. உய்முறை அறியேன்; ஓர்ந்த

உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன்; கானில்

செல்வ ழி அறியேன்; தாய்தன்

கைமுறை அறிந்தேன் தாயும்

கடிந்தெனைத் தனித்துப் போனாள்.

இயற்கை கொண்ட பரிவு

 

5. நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே .

 

பாடல் விளக்கம்:

     1. கருணையன், தன் மலர் போன்ற கையைக் குவித்து, “பூமித்தாயே! என் அன்னையின் உடலை நீ அன்போடு காப்பாயாக’’ என்று கூறி, குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான். இவ்வுலகில் செம்மையான அறங்களையெல்லாம் தன்னுள் பொதிந்து வைத்து, பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை, மண் இட்டு மூடி அடக்கம் செய்து, அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும் ஒரு சேரப் பொழிந்தான்.

 

        2. “என் தாய், தன் வாயாலே மணிபோலக் கூறும் உண்மையான சொற்களையே மழைநீராக உட்கொண்டு, அத்தாயின் மார்பில் ஒரு மணிமாலையென அசைந்து, அழகுற வாழ்ந்தேன். ஐயோ! இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்னே தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப்போல, நானும் இப்போது என் தாயை இழந்து வாடுகின்றேனே!“

 

      3. “என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட

மலரைப்போல வாடுகிறது. தீயையும் நஞ்சையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உண்டான, புண்ணின் வலியால் வருந்துவது போன்றது என் துயரம். துணையைப் பிரிந்த ஒரு பறவையைப்போல நான் இக்காட்டில் அழுது இரங்கி வாடுகிறேன்; சரிந்த வழுக்கு நிலத்திலே, தனியே விடப்பட்டுச் செல்லும் வழி தெரியாமல் தவிப்பவன் போல் ஆனேன்.“

 

     4. “நான் உயிர்பிழைக்கும் வழி அறியேன்; நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்; உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்; காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்; என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். என்னைத் தவிக்க விட்டுவிட்டு என்தாய் தான் மட்டும் தனியாகப் போய்விட்டாளே!“

 

       5. நவமணிகள் பதித்த மணிமாலைகளைப் பிணித்ததுபோன்று நல்ல அறங்களை எல்லாம் ஒரு கோவையாக இணைத்த தவத்தையே அணிந்த மார்பனாகிய கருணையன், இவ்வாறு புலம்பிக் கூறினான். அது கேட்டுப் பல்வேறு இசைகளை இயக்கியது போன்று, தேன்மலர்கள் பூத்த மரங்கள் தோறும் உள்ள, மணம்வீசும் மலர்களும் மலர்ந்த சுனை தோறும் உள்ள, பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன.

No comments:

Post a Comment