Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 5 - உரைநடை

 

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 5

உரைநடை (Source TN Textbook)

இளமையில் பெரியார் கேட்ட வினா

 

       இராமசாமி குறும்புக்காரச் சிறுவன். யார் எதனைச் சொன்னாலும் ‘ஏன், எப்படி, எதற்கு’ என்று வினா கேட்பான். அவனுக்குப் புரியவைப்பது எளிதான செயலாக இல்லை. அமைதிப்படுத்துவது பெற்றோரான வெங்கடப்பருக்கும் – சின்னத்தாயம்மாளுக்கும் பெரும்பாடாக இருந்தது.

 

     இராமசாமி துடுக்காகக் கேட்கிற வினாக்களால் எரிச்சல் அடைந்தோர் பலர்; ‘கெட்டிக்காரச் சிறுவன்’ என்று தட்டிக்கொடுத்தோர் சிலர். தானாகச் சிந்தித்துப் புரிந்துகொள்ள நினைக்கிறான் இராமசாமி; அதனால், தப்பு ஒன்றும் இல்லையே என்றும் சிலர் பாராட்டினர்.

 

    இராமசாமிக்குப் பன்னிரண்டு அகவை. ஈரோடு அவனது ஊர். அங்கு இராமநாதன் என்பவரின் கடையில் இராமசாமி உட்கார்ந்திருந்தான். நடக்கிற எந்த ஒரு செயலுக்கும் மனிதனின் தலைவிதிதான் காரணம் என்று சொல்லிக்கொண்டே இருப்பவர் அந்த இராமநாதன்.

 

    இராமநாதனின் தலைக்குமேல் தொங்கிக்கொண்டு இருந்த தராசுத்தட்டை, அவர் கவனிக்காத நேரம் பார்த்து மெல்லத் தட்டிவிட்டான் இராமசாமி. இராமநாதனின் தலையில் தட்டு ‘மடாரென’ வந்து விழுந்தது. “ஏன் தள்ளிவிட்டே?” என்று இராமசாமியைச் சினத்துடன் விரட்டினார் கடைக்காரர். “தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கிறது என்று சொன்னீர்கள் அல்லவா? என்னை ஏன் விரட்டுகிறீர்கள்?” என்று சொல்லியபடியே இராமசாமி ஓடி மறைந்தான்.

 

     இராமசாமியின் பெற்றோர் அவன் பள்ளிக்குச் செல்லும்போது, நாள்தோறும் ஓர் அறிவுரையைச் சொல்லி அனுப்புவர். “பள்ளிக்குச் செல்லும் வழியில் உனக்கு நா வறட்சி ஏற்படும். அப்போது மற்ற மாணவர்கள் வீடுகளில் நீ போய் நீர் கேட்காதே. அவர்கள் கீழ்ச்சாதி மக்கள். அவர்கள் தொட்ட எதனையும் நாம் உண்ணவோ குடிக்கவோ கூடாது.” என்பதுதான் அது.

 

       இராமசாமிக்கு இது புரியவில்லை; பிடிக்கவும் இல்லை. நீர்தானே குடிக்கிறோம், யார் வீட்டில் குடித்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றியது.

 

      ஒருநாள், இராமசாமிக்கு நீர்வேட்கை ஏற்பட்டது; வீடு கொஞ்சம் தொலைவில் இருந்தது. வீட்டிற்குச் செல்லும்வரை நீர் குடிக்காமல் இருக்க இயலாது.

 

      அவனது வகுப்பு ஆசிரியர் வீடு, அவன் செல்லும் வழியில் இருந்தது. அங்குச் சென்று நீர் கேட்டான். அங்கிருந்த பெண் குவளையில் கொண்டுவந்து நீர் கொடுத்தாள்; இராமசாமியும் குடித்தான்.

 

          அவன் குடித்த குவளையின்மீது நீர் தெளித்த பிறகே அப்பெண் அதனை வீட்டுக்குள் கொண்டு சென்றாள். இராமசாமிக்கு அவளின் செயல் புரியவில்லை.

 

        வீட்டிற்கு வந்ததும் அம்மாவைக் கேட்டான். “அவர்கள் மேல்சாதிக்காரர்கள். நாம் தொட்ட பொருள்களைத் தூய்மை செய்துவிட்டுத்தான் மீண்டும் பயன்படுத்துவார்கள்” என்றார் இராமசாமியின் அம்மா. இராமசாமிக்கு அம்மா சொன்னது வியப்பை அளித்தது. அவனுடைய பெற்றோர் சிலரைக் கீழ்ச்சாதியினராக நினைக்கின்றனர்; வேறு சிலரோ அவனையும், அவனுடைய பெற்றோரையும் கீழ்ச்சாதியினராக நடத்துகின்றனர். மனிதர்கள் ஏன் இப்படி ஒருவரையொருவர் தாழ்வாக நினைக்கின்றனர்? என்று இராமசாமி சிந்தித்தான்.

 

        யார் யாரையெல்லாம் கீழ்ச்சாதிக்காரர்கள் என்று தன் வீட்டார் கருதுகிறார்களோ, அவர்கள் வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடுவது என்று இராமசாமி முடிவு செய்தான். அதன்படி எல்லாக் குழந்தைகளுடனும் விளையாடத் தொடங்கினான்.

 

      அஃது அவனுக்குப் பிடித்தும் இருந்தது; யாரும் யாரையும் தொடலாம்; யாரும் யார் வீட்டிலும் சாப்பிடலாம் என்பதனையும் உறுதிசெய்து கொண்டான்.

 

     யார் எதனைச் சொன்னாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தற்சிந்தனையுடன் இருந்த இராமசாமி, யார்? வினாமேல் வினாக் கேட்டு எல்லாரையும் சிந்திக்கச் செய்த அந்தச் சுட்டிப் பையன், யார்?

 

      உங்கள் ஊரின் நடுவே பெரிய தாடியுடன், கண்ணாடி அணிந்த ஒரு தாத்தாவின் சிலையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சில இடங்களில் கைத்தடியைப் பிடித்தவாறும், வேறுசில இடங்களில் உட்கார்ந்து புத்தகம் படித்தவாறும் அவரது சிலை அமைக்கப்பட்டு இருக்கும்.

 

     அந்தத் தாத்தாதான் இராமசாமி. தமிழகத்தின் மிகப்பெரிய சிந்தனையாளர் அவர்; ஏன், இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளரும்கூட. பெரியார் ஈ. வெ. ரா. என்றும் அவரை அழைப்பார்கள்.

 

      சிறுவன் இராமசாமி, பெரியார் இராமசாமியாக வளர்ந்து உயர்ந்த கதை மிகச் சுவையானது. அவர் வளர்ந்து பெரியவரான பிறகும் வினாக்கள் கேட்பதனை நிறுத்தவே இல்லை. மற்றவர்களையும் வினாக்கள் கேட்கப் பழக்கவேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அவர், தாம் வாழ்ந்த காலம் முழுவதும் அறிவுக்கே முதலிடம் கொடுத்தார். அறிவைப் பயன்படுத்தி எது சரி? எது தவறு? என்று சிந்தித்துப் புரிந்துகொண்ட பின்னரே செயல்படவேண்டும் என்றவர் அவர்.

 

        பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழக்கமானாலும் சரி; அதனைச் செய்தால் என்னவாகும்; செய்யாவிட்டால் என்னவாகும் என்று சிந்தித்தே முடிவெடுக்க வேண்டும் என்றார் அவர்.

 

    இதுபோன்ற அறிவார்ந்த செயல்களால் பெரியார் பலரையும் ஈர்த்தார்; அடிக்கடி கூட்டங்களை நடத்தினார்; சாதி உயர்வுதாழ்வுகளையும் மத வேறுபாட்டையும் அகற்ற வேண்டும் என்றார்; அதற்காக ஒரு சங்கமும் அமைத்தார்; அதற்குப் ‘பகுத்தறிவாளர் சங்கம்’ என்பது பெயர்.

 

    இளமையிலே பெரியார், மகாத்மா காந்தியின் தொண்டரானார்; காங்கிரசுக் கட்சியில் சேர்ந்தார்; கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார்; கள் இறக்குவதனைத் தடுப்பதற்காகத் தன்னுடைய தோப்பிலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்ந்தார். கதர் அணிய வேண்டும் என்று பரப்புரை செய்தார். அதுமட்டுமன்றி, தன் தோளில் கதர்த்துணிகளைச் சுமந்து விற்றார். பிறப்பினால் வரும் கீழ்ச்சாதி – மேல்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் மனிதச்சாதி என்னும் ஓரினமாக எண்ணவேண்டும் என்றார்.

 

     பிறரை மதித்தல் வேண்டும், அது மரியாதை. தன்னைத்தானே மதிப்பதும், தன் மரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளுவதும் சுயமரியாதை. சிறு குழந்தையையும் ‘வாங்க, போங்க...’ என்று மரியாதையுடன் அழைத்துப் பேசுவது பெரியாரின் பண்பு. பெரியார் மரியாதையையும் – சுயமரியாதையையும் தம்மிரு கண்ணாகக் கருதினார்.

 

      கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள், கோவில் சுற்றுத்தெருவில் நடப்பதற்குத் தடை இருந்தது. அதனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதனால், ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப்பட்டார்.

 

    “கீழ்ச்சாதி – மேல்சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல, எல்லாருக்கும் கல்வி தேவை; எல்லாரும் கல்வி பெறுதல் வேண்டும்” என்று பெரியார் கூறினார். இந்தக் கருத்துகள் இளைஞர்களை ஈர்த்தன. அதனால், சுயமரியாதை இயக்கம் வலுவடைந்தது.

 

      “மனிதர்களை மனிதர்களாக மதிக்கவேண்டும் என்பதனை ஏற்கிறீர்கள். அதுபோல, மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும். ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்களும் செய்தல் வேண்டும்; அவர்களால் செய்யவும் இயலும். பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.”

 

     இராமசாமி இவ்வாறு பேசியது பெண்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

     அவர்களும் துணிவு பெற்று மேடையேறிப் பேசினார்கள்.

 

    தாய்மார்தாம் இராமசாமிக்குப் ‘பெரியார்’ எனப் பட்டம் வழங்கினார்கள்.

 

    பெண்விடுதலைக்கு முதற்படியாகப் பெண்கள் எல்லாரும் கல்வி கற்கவேண்டும் என்பதனைப் பெரியார் வற்புறுத்தினார். பெண்கள் துணிவுடனும் நம்பிக்கையுடனும் விளங்குதல் வேண்டும் என்றார். மற்போர்,குத்துச்சண்டை முதலிய விளையாட்டுகளையும் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் என்றார். அரசுப்பணி, இராணுவம், காவல்துறை முதலியவற்றிலும் பெண்களைச் சேர்த்தல் வேண்டும் என்றார்.

 

      குணத்திலும் அறிவிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறுபாடு இல்லை; இருவரும் நிகரானவர்களே என்பதனை மீண்டும்மீண்டும் வற்புறுத்தினார். தம் தொண்ணூற்றைந்து அகவையிலும்கூடப் புதிய சிந்தனைகளை எடுத்துக் கூறினார்.

 

    ‘அறிவு என்பது வளர்ந்துகொண்டே இருக்கும்; எனவே, புதியனவற்றை ஏற்றல் வேண்டும்’ என்றார். நெடுநாள் வாழ்ந்தவரான பெரியார், நமது சமுதாயத்திற்குச் செய்த தொண்டுகள் எண்ணற்றவை. பெரியாரின் பெருமைக்குக் காரணம், தற்சிந்தனையும் சிந்தித்ததனைச் சொன்ன துணிச்சலும்தான். அவற்றைப் பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்வோம்; நம்மை மேலும் வளர்த்துக்கொள்வோம்!




பெரியாரின் கையொப்பம்

 

சிறப்புக் குறிப்புகள்

 

    17.09.1879 இல் பிறந்து, 24.12.1973இல் மறைந்த பெரியார், தம் வாழ்நாளில் 8600 நாள், 13,12,000 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து, 10,700 கூட்டங்களில் 21,400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றிச் சாமுதாயத் தொண்டு ஆற்றினார்.

 

       1970 ஆம் ஆண்டு சமுதாயச் சீர்திருத்தச் செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் ‘யுனெஸ்கோ விருது’ பெரியாருக்கு வழங்கப்பட்டது.

 

      நடுவண் அரசு 1978ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...