Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 6 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 6

உரைநடை  (Source TN Textbook)

தேசியம் காத்த செம்மல்

பசும்பொன் முத்துராமலிங்கர்

          பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாடு அயலவர் ஆட்சிக்கு அடிமைப்பட்டது. அடிமைத்தளை நீங்குவதற்குக் கண்ணீரும் செந்நீரும் சிந்தினர் பலர்.

  

            தமிழகத்தில் சுப்பிரமணிய சிவா, வ.வே.சுப்பிரமணியம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம், வாஞ்சிநாதன், திருப்பூர்க் குமரன் முதலியோர் விடுதலைக்குப் பாடுபட்டனர். இவர்களுள் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கர்.

 

பிறப்பும் வளர்ப்பும்

        இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் என்னும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் முப்பதாம் நாள் பிறந்தவர் முத்துராமலிங்கர். இவருடைய தந்தையார் உக்கிர பாண்டியனார், தாயார் இந்திராணி அம்மையார். இவர் அன்னையை இளமையிலே இழந்தார். தாயோடு அறுசுவை உண்டி போயிற்று. எனினும், முத்துராமலிங்கருக்கு இசுலாமியப் பெண்மணி ஒருவர் தாயாகிப் பாலூட்டி வளர்த்தார். பாட்டியாரின் அன்பணைப்பில் இவர் வளர்ந்தார். பாட்டியின் வீட்டில் வளர்ந்த நாள்களில் இவருக்குக் கற்பித்த ஆசிரியர் குறைவற வாசித்தான் என்பவர் ஆவார்.

 

பள்ளிக்கல்வி

        முத்துராமலிங்கர் தம் தொடக்கக் கல்வியைக் கமுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கிறித்தவப் பாதிரியார்களிடம் பெற்றார்; பசுமலை உயர்நிலைப் பள்ளியில் சில ஆண்டுகள் பயின்றார். பின்னர், இவர் ஐக்கியக் கிறித்தவப் பள்ளியில் படித்தார்; இராமநாதபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்தார். இவர் இராமநாதபுரத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது, அந்நகரில் பிளேக் நோய் பரவியது; அதனால், இவருடைய கல்வியும் நின்றது.

 

பல்துறை அறிவு

     பள்ளிப்படிப்பு நின்றாலும் கேள்வியறிவையும் பட்டறிவையும் மிகுதியாகப் பெற்றார் முத்துராமலிங்கர். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழியிலும் வல்லமை பெற்றார்; அம்மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றார்; சிலம்பம்,குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல், சோதிடம், மருத்துவம் ஆகியனவற்றைக் கற்றறிந்தார்; இளமையிலேயே அரசியலில் ஆர்வங்கொண்டார்.

 

பொதுத்தொண்டில் நாட்டம்

    முத்துராமலிங்கர், இளமை முதற்கொண்டே பொதுத்தொண்டில் ஈடுபாடு காட்டினார். இவர் முப்பத்திரண்டு சிற்றூர்களில் தமக்குச் சொந்தமாக இருந்த நிலங்களை’ உழுத தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து மகிழ்ந்தார்.

     

        இவர் நிலக்கிழார் ஒழிப்பிலும், ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்ற வீரர் ஆவார்; சமபந்தி முறைக்கும் ஊக்கமளித்த பெருமகனாவார். இவர் காலத்தில் ஆங்கில அரசு, குற்றப் பரம்பரைச் சட்டம் இயற்றி மக்களுள் சிலரை ஒதுக்கி வைத்திருந்தது; அவ்வினத்தின் துயர் களைய அரும்பாடுபட்டார்; அவர்களுடைய வாழ்க்கை உயர்வுக்காகப் போராடினார்; அதனால், குற்றப் பரம்பரையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செய்தார்.

 

      தாழ்த்தப்பட்டவர்க்கென இவர் பல தொண்டுகளைச் செய்துள்ளார். இவர், “சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை; ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல; சாதியும் நிறமும் அரசியலுக்கும் இல்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை” எனச் சாதியைப் பற்றிக் கூறியுள்ளார்.

 

நாட்டுப்பற்று

       முத்துராமலிங்கரின் இளமைப்பருவத்தில் இந்தியா, ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இவர், தம் நாடு விடுதலை பெறவேண்டுமெனத் தணியா வேட்கை கொண்டிருந்தார்.

 

        இவர், வங்கச் சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைத் தம் அரசியல் வழிகாட்டியாகக் கொண்டார்; தமிழகத்தின் சிங்கமானார். இவருடைய பேச்சிலும் மூச்சிலும் விடுதலை உணர்வே மிளிர்ந்தது.

 

      விடுதலைப்போர் கடுமையாக இருந்த நாள்களில் ஆங்கில அரசு, வடஇந்தியாவில் திலகருக்கும் தென்னிந்தியாவில் முத்துராமலிங்கருக்கும் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. மக்களிடையே விடுதலை வேட்கையினை ஊட்டியவர் இவர். ‘தேசியம் காத்த செம்மல்’ எனத் திரு.வி.கலியாண சுந்தரனார் இவரைப் பாராட்டியுள்ளார்.

 

     இவர் பங்குபெற்ற விடுதலைப் போராட்டங்கள் பல. ‘சுதந்தரப் பயிரைத் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்; கண்ணீரால் காத்தோம்’ என்பது பாரதி வாக்கு. இதனை மெய்ப்பிக்குமாறு, இவர் பல இன்னல்களை ஏற்று விடுதலைக்கு உழைத்தார். தாம் ஈடுபடும் விடுதலைப் போராட்டப் பணிகளுக்கு இல்லறவாழ்வு இடையூறாகும் எனக் கருதினார். எனவே, திருமண வாழ்வினைத் தவிர்த்தார்.

 

அரசியல் வாழ்க்கை

       தம் அரசியல் வாழ்க்கையிலும் முத்துராமலிங்கர் மேன்மை பெற்றிருந்தார். தேர்தலில் போட்டியிட்ட ஐந்துமுறையும் வெற்றிவாகையே சூடினார்.

 

     1937, 1946, 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இவர் பெற்றிருந்த மக்கட்செல்வாக்கைக் காட்டின. தொண்டு செய்வதற்கே இவர், தம் தொகுதிக்குச் சென்றுள்ளார்; தேர்தல் விளம்பரத்திற்குச் சென்றார் இலர்.

 

பலரும் போற்றும் பண்பாளர்

    தெய்வீகம், தேசியம் ஆகிய இரண்டையும் இரு கண்ணாகப் போற்றியவர் பசும்பொன்னார். இவர் ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என எடுத்துரைத்தவர். இவர் சமயச் சான்றோராகவும் கருதப்பட்டார்.

 

     வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்டமாருதம், இந்து புத்த சமய மேதை எனப் பலவாறாகப் பாராட்டப் பெற்றவர். இவர் அனைத்து மதத்தினரிடத்திலும் அன்பும் பரிவும் காட்டினார்.

 

     விவேகானந்தரின் தூதராக, நேதாஜியின் தளபதியாக, சத்தியசீலராக, முருகபக்தராக, ஆன்மீகப் புத்திரராக, தமிழ்பாடும் சித்தராக, தென்பாண்டிச் சீமையின் முடிசூடா மன்னராக, நீதிவழுவா நேர்மையாளராக, புலமையில் கபிலராக, வலிமையில் கரிகாலனாக, கொடையில் கர்ணனாக, பக்தியில் பரமஹம்சராக, இந்தியத் தாயின் நன்மகனாக வாழ்ந்தவர் முத்துராமலிங்கர்.

 

      சமயம், சமுதாயம் பற்றிய இவருடைய சிந்தனைகள் மனிதகுலத்திற்கு வழிகாட்டுவன. இறப்பு என்பது எவ்வகையிலும் வரலாம். இதனையே இவர், “பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு” எனக் கூறியுள்ளார். மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் குறிப்பிடுகிறார்.

 

மறைவு

    ஐம்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து மக்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட இப்பெருமகனார், 1963ஆம் ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாளில் இயற்கை எய்தினார். அதனால், இவர் பிறந்த நாள் அனைவர் நினைவிலும் நிற்கும் நாளாயிற்று.

 

நினைவுச்சின்னம்

       தமிழ்நாடு அரசு, இப்பெருமகனாரைப் போற்றும்வகையில் சென்னை மாநகரில் இவருடைய உருவச்சிலையினை நிறுவியுள்ளது. அச்சிலை நிறுவப்பட்டுள்ள சாலைக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

       பசும்பொன் முத்துராமலிங்கரின் வாழ்க்கை வரலாறு, நாட்டுப்பற்றினையும் மத நல்லிணக்கத்தையும் மனிதநேயத்தினையும் உணர்த்துவதாய் விளங்குகிறது.

 

சிறப்புத் தகவல்கள்

     முத்துராமலிங்கரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939இல் மதுரைக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வருகை தந்தார்.

 

     நடுவண் அரசு 1995இல் முத்துராமலிங்கருடைய அஞ்சல்தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது.

 

       முத்துராமலிங்கர், தம் சொத்துகள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துக்கொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேருக்கு இனாம் சாசனமாக எழுதி வைத்தார்.


No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...