Latest Government Jobs and updates

Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 6 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 6

துணைப்பாடம் (Source TN Textbook)

எது பெரிய உண்மை?

        அஃது ஒரு சிற்றூர்; ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று, நிலைமை மாறிப்போய்க் கிடக்கிறது; பஞ்சத்தில் வறண்டு கிடக்கிறது. அந்தச் சிற்றூரின் கோடியில் ஒரு குடிசை.

 

      யாரோ வாழ்ந்துவிட்டுப் போன குடிசை அது. இப்போது அந்தக் குடிசை, இருவருக்கு அடைக்கலம் தந்துள்ளது. அவ்விருவரில் ஒருவர் பார்வை அற்றவர்; மற்றவர் கால் இல்லாதவர். அவர்களுக்குப் பிழைக்க வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடும்போது அவர்கள் செல்வார்கள். மிஞ்சிய காய், கனி, உணவுப் பொருள்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதனை உணவாக்கி, அவர்கள் உண்டு வாழ்ந்தனர்.

 

         ஆனால், பஞ்சம் வந்தபிறகு, கடைத்தெரு பெரும்பாலும் அடைபட்டே கிடக்கிறது. எப்போதாவது திறந்திருந்தாலும் இந்த இருவருக்கும் எதுவும் கிடைப்பதில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர்.

 

       தொடர்ந்து ஐந்துநாள் எதுவும் கிடைக்காமல் பட்டினியில் இருந்தபோது, இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.

 

       அவ்விருவரும் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எதனையும் செய்யத் துணிந்தனர். கண் தெரியாதவரால் எவ்வளவு தொலைவு தட்டுத்தடுமாறிப் போகமுடியும்? கால் இல்லாதவரால் ஊர்ந்து எவ்வளவு தொலைவுவரை போகமுடியும்? பக்கத்திலிருந்த வயல்கள் எல்லாம் வறண்டு கிடந்தன.

 

       தொலைவில் இருந்தது ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தனிப்பட்ட தண்ணீர் வசதி! தோட்டம், பஞ்சத்திலும் செழித்திருந்தது. அங்கே செல்வதென்று முடிவு செய்தார்கள்.

 

     கால் இல்லாதவரைக் கண் இழந்தவர் சுமந்து செல்லுதல் வேண்டும். கால் இல்லாதவர் வழிகாட்டவும் கண் இழந்தவர் நடத்தலும் வேண்டும். இஃது அவர்களின் ஏற்பாடு.

 

      வழிகாட்டுவது எளியது; ஆனால், அதன்படி நடப்பது கடினம். கண் இழந்தவர் மூச்சு வாங்க நடந்தார். எப்படியோ ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டனர்.

 

      ஊருக்குள் யாரும் நெருங்க அஞ்சும் தோட்டம் அது; பிடிபட்டால், அடி உதை உறுதி!

 

        தோட்டத்தில் பழங்களும் காய்கறிகளும் குவிந்து கிடந்தன. கால் இல்லாதவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு, கண் இழந்தவர் தட்டுத்தடுமாறிப் போய்க் கைக்கு அகப்பட்டதனை எடுத்து வந்தார்.

 

      பார்வை அற்றவர், கால் இல்லாதவரைச் சுமந்துகொண்டு குடிசைக்குத் திரும்பினார்; எடுத்து வந்தவை இரண்டு மூன்று நாளுக்குப் போதும்.

 

      நெடுநாளுக்குப் பிறகு, அன்றுதான் அவர்கள் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் அவ்விருவருக்கும் கேட்டது.

 

      ஊர் முச்சந்தியில் நின்று, தலைவர் கத்திக்கொண்டு இருந்தார், “யாரடா, என் தோட்டத்தில் இறங்கித் திருடினவன்?”

 

      ஊரே கைகட்டிப் பயந்து நடுங்கியது; என்ன நடக்குமோ? என்று அஞ்சியது.

 

      யாரும் திருட்டை ஒப்புக்கொள்ள முன் வராததனால், ஊர்த்தலைவர், ‘நீதி தேவதை’யின் கோவிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி, ‘நீதி தேவதை’யை ஊருக்குள் அழைத்து வந்தார்.

 

   ஒவ்வொருவரும் ‘நீதி தேவதை’யின்முன் வந்து உண்மையைச் சொல்லுதல் வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டுபிடித்துவிடும்; பொய் சொன்னாலும் கண்டுபிடித்துவிடும்; தவறு செய்தவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடும்.

 

     ஊர் மக்கள் ஒவ்வொருவராக வந்து  ‘தான் திருடவில்லை’ என்று வாக்குமூலம் அளித்தனர். யாரையும் ‘நீதி தேவதை’ கொல்லவில்லை.

 

     இனியிருப்போர் பார்வையற்றவரும் கால் இல்லாதவரும் மட்டும்தான். முதலில் யாருக்கும் அவர்களின் நினைவு வரவில்லை; சட்டென்று நினைவுவர, ஊர்த்தலைவர் கத்தினார்.

 

   “அந்த ரெண்டு பயல்களையும் இழுத்துட்டு வாங்கடா!”

 

    இருவரும் தட்டுத்தடுமாறி வந்தனர். ஊர் மக்களுக்குக் கண் கலங்கியது.

 

       நீதி தேவதையின்முன், முதலில் கண் இழந்தவர் நின்று சொன்னார்: ‘தேவதையே! நான் பிறவிக்குருடன்; எதனையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்தது இல்லை” என்றார். தேவதை அவரை எதுவும் செய்யவில்லை.

 

     அடுத்துக் கால் இல்லாதவர் வந்தவர். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன்; நடக்க மாட்டாதவன்; தலைவர் தோட்டத்தில் என் கால் படவே இல்லை” என்றார். கால் இல்லாதவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. அப்படியானால், திருடியது யார்?

 

     ஊர் மக்களுக்கு வியப்பு! நீதி தேவதை, கோவிலைவிட்டு வெளியே வந்தபின், குற்றவாளியைத் தண்டிக்காமல் திரும்பப் போகுமா?

 

      அப்போது, எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெரித்தன.

 

    ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார்.

 

   அப்படியானால், ஊர்த்தலைவர்தான் திருடரா? இதென்ன வியப்பு!

 

   ஆனாலும், எல்லார்க்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சி!

 

   ஊர் மக்கள் நீதி தேவதையை நெருங்கி, “ஊர்த்தலைவரைக் கொன்றது ஏன்?” என்று கேட்டனர்.

 

    நீதி தேவதையின் குரல் உறுதியாய் எதிரொலித்தது.

 

   “சிறிய உண்மையைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. உண்மைகளிலேயே பெரிய உண்மைத்தான் நான் தேடுவேன். திருடர்களைவிடத் திருடத் தூண்டியவர்களையே நான் தண்டிப்பேன். ஊர் மக்கள் பட்டினி கிடக்கும்போது, மொத்த உணவுப் பொருள்களையும் குவித்து வைத்திருப்பவன்தானே பெரிய திருடன். ஆகவே, குற்றவாளியைத் தண்டித்தேன்.”

 

  “ஆமாம். அதுவும் சரிதான்...” என்றது மக்கள் கூட்டம்.

 

(நாட்டுப்புறக் கதை)

No comments:

Post a Comment