Latest Government Jobs and updates

Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 8 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 8

துணைப்பாடம்   (Source TN Textbook)

நாடும் நகரமும்

 

நாடு

    நாடு என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்தமுறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சிக்கு உட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன. இப்பெயர்கள் மிகத் தொன்மை வாய்ந்த தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் ‘நாடு’ என அழைக்கப்பட்டன. கொங்குநாடு, தொண்டைநாடு முதலியன இதற்குச் சான்றாகும்.

 

       சிறுபான்மையாகச் சில தனி ஊர்களும் நாடென்று பெயர் பெற்று வழங்குதல் உண்டு. முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையில் உள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயர் உடையது. இங்ஙனம், நாடு என்னும் சொல் ஊரைக் குறிக்கும் முறையினைச் சோழ நாட்டிலும் காணலாம்.

 

     மாயவரத்திற்கு அணித்தாக உள்ள ஒரூர் கொரநாடு என வழங்கப்படுகிறது. கூறைநாடு என்பதே கொரநாடு என மருவிற்று. பட்டுக்கோட்டை வட்டத்தில் கானாடும், மதுராந்தக வட்டத்தில் தொன்னாடும் உள்ளன.

 

     நாடு என்னும் சொல்லின் பொருள் வழக்காற்றில் நலிவுற்ற தன்மையை இவ்வூர்ப் பெயர்கள் உணர்த்துக்கின்றன.

 

நகரம்

    சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்கும். நாட்டின் தலைமைசான்ற நகரம் தலைநகரம் எனப்படும். முன்னாளில் ஊர் என்றும், பட்டி என்றும் வழங்கிய சில இடங்கள், பிற்காலத்தில் சிறப்புற்று நகரங்கள் ஆயின.

    

       ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரைத் துறந்து, ஆழ்வார்திருநகரியாகத் திகழ்கின்றது. பாண்டி நாட்டிலுள்ள விருதுப்பட்டி, வாணிகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகின்றது. இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.

 

     சென்னையின் பகுதியான தியாகராய நகரமும், காந்தி நகரமும், சிதம்பரத்திற்கு அண்மையில் அமைந்து இருக்கும் அண்ணாமலை நகரமும், தஞ்சையில் தோன்றியுள்ள கணபதி நகரமும் இதற்குச் சான்றுகள் ஆகும்.

 

சென்னை

    இக்காலத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை; பெரும்பாலும் மேடுபள்ளமாகக் கிடந்தது அவ்விடம்.

 

     சென்னையின் பகுதிகளாக இன்று விளங்கும் மயிலாப்பூரும், திருவல்லிக்கேணியும் கடற்கரைச் சிற்றூர்களாக அந்நாளில் காட்சி அளித்தன.

 

     மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழைமை வாய்ந்தது. திருஞானசம்பந்தர் அதனைப் பாடியுள்ளார்.

 

     திருமயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அல்லி மலர்கள் அழகுற மலர்ந்து கண்ணினைக் கவர்ந்த கேணியின் அருகே எழுந்த ஊர் அல்லிக்கேணி எனப் பெயர் பெற்றது. அங்கே பெருமாள், கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருவல்லிக்கேணி ஆயிற்று.

 

   திருவல்லிக்கேணிக்கு வடக்கே மேடும்பள்ளமுமகாப் பல இடங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று நரிமேடு.

 

      இன்று மண்ணடி என வழங்கும் இடம் ஒரு மேட்டின் அருகில் பெரும்பள்ளமாக அந்நாளில் காணப்பட்டது.

 

(ரா.பி.சேதுப்பிள்ளையின், ‘ஊரும் பேரும்’ என்னும் நூலில் இருந்து எடுத்தாளப்பட்ட பகுதி.)

 

புரம்

   ‘புரம்’ என்னும் சொல், சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி எனப் பெயர் பெற்ற ஊர் பின்னர், ‘புரம்’ என்பது சேர்ந்து காஞ்சிபுரம் ஆயிற்று. பல்லவபுரம் (பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் முதலியவை மேலும் சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 

பட்டினம்

  கடற்கரையில் உருவாகும் நகரங்கள் ‘பட்டினம்’ எனப் பெயர் பெறும். காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் ஆகியவை ‘பட்டினம்’ எனப் பெயர் பெற்ற ஊர்கள் ஆகும்.

 

பாக்கம்

       கடற்கரைச் சிற்றூர்கள் ‘பாக்கம்’ எனப் பெயர் பெறும். பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் ‘பாக்கம்’ எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.

 

புலம்

     ‘புலம்’ என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, மாம்புலம், தாமரைப்புலம், குரவைப்புலம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

 

குப்பம்

      நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள், ‘குப்பம்’ என்னும் பெயரால் வழங்கப்பெறும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம், மஞ்சக்குப்பம், மந்தாரக்குப்பம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment