Latest Government Jobs and updates

Wednesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 9 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 

         6ம் வகுப்பு

           இயல் 9

செய்யுள்   (Source TN Textbook)

குற்றாலக் குறவஞ்சி

குற்றால மலையின் வளம்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்கார்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!

 

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்

ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்

வாடக் காண்பது மின்னார் மருங்கு

வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு

போடக் காண்பது பூமியில் வித்து

புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து

தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி

திருக்குற் றாலர் தென் ஆரிய நாடே!

 

பாடல் – 1, பொருள் 

    வளைந்த இளம்பிறையைத் தன் சடையில் அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் மலை குற்றாலமலை. அதுதான் எங்கள் மலை. இந்த மலையில் ஆண் குரங்குகள் பெண் குரங்குகளுக்குப் பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தரும். உண்ணும்போது பெண் குரங்குகள் பழங்களைத் தவறவிட்டு விடும். அவை சிந்தும் பழங்களைக் கேட்டுத் தேவர்கள் கெஞ்சி நிற்பார்கள். உயர்ந்த எங்கள் மலையில் உள்ள கானவர்கள் வானத்தில் இருக்கும் தேவர்களைக் கண்சிமிட்டி அழைப்பார்கள்.

 

   சித்தர்கள், இறப்பை நீக்கும் மூலிகைகளை எங்கள் மலையில் வளர்த்து வருவார்கள். அருவியின் அலை உயர்ந்து எழும்பி வானத்தையே தொடும். அந்த அலைநீரில் கதிரவனின் தேரில் பூட்டிய குதிரைகளின் கால்களும் தேரின் சக்கரங்களும் வழுக்கிவிழும்.

 

பாடல் – 2, பொருள்

      குற்றாலநாதராகிய சிவபெருமான் வாழும் நாடு எங்கள் நாடு. எங்கள் நாட்டில் மக்கள் அஞ்சி ஓடிப்போவது இல்லை; வெள்ளம்தான் ஓடும். மக்கள் இங்கு ஒடுங்கி இருப்பதில்லை; தவம் செய்வோரின் உள்ளம்தான் ஒடுங்கி இருக்கும். மக்கள் இங்கு நோய், வறுமையால் வாடுவது இல்லை; பெண்களின் மெல்லிடை மட்டுமே வாடும். மக்கள் இங்கு வருந்துவது இல்லை; முத்துகளை ஈனும் சங்குகள் மட்டுமே வருந்துகின்றன. இங்குப் பயன் அற்றவை என எவையும் தூக்கிப் போடப்படுவது இல்லை; விதைகள் மட்டுமே மண்ணில் போடப்படுகின்றன. மக்கள் இங்கே துன்பத்தில் புலம்புவது இல்லை; குழந்தைகள் காலில் அணியும் கிண்கிணிகளே புலம்பல் ஒலி எழுப்புகின்றன. மக்கள் இங்கே செல்வங்களைத் தேடி அலைவதில்லை; அறம், பெருமை இரண்டை மட்டுமே மக்கள் இங்குத் தேடுவார்கள். இவ்வாறு குறத்தி, தன் மலைவளமும் நாட்டுவளமும் குறித்துக் கூறுகிறாள்.

 

சொல்பொருள்

1. வானரங்கள் – இச்சொல், பொதுவாகக் குரங்குகளைக் குறிக்கும். இங்கு ஆண் குரங்குகளைக் குறித்தது;

மந்தி – பெண் குரங்கு;

வான்கவிகள் – தேவர்கள்;

கமனசித்தர் – வான்வழியே நினைத்த இடத்துக்குச் செல்லும் சித்தர்கள்;

காயசித்தி – மனிதனின் இறப்பை நீக்கிக் காக்கும் மூலிகை;

பரிக்கால் – குதிரைக்கால்;

கூனல் – வளைந்த;

வேணி – சடை.

 

2. மின்னார் – பெண்கள்;

மருங்கு – இடை;

சூல்உளை – கருவைத் தாங்கும் துன்பம்.

 

நூற்குறிப்பு

       இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குறவஞ்சி. ஆசிரியர் திரிகூட ராசப்பக்கவிராயர் ஆவார். குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல். ஒசைநயமிக்க பாடல்கள் இந்நூலில் நிறைந்து காணப்படுகின்றன.

சிலேடைப்பாடல்

மரமும் பழைய குடையும்

பிஞ்சு கிடக்கும் பெருமழைக்குத் தங்காது

மிஞ்ச அதனுள் வெயில்ஒழுகும் – தஞ்சம்என்றோர்

வேட்டதுஅருள் முத்துசுவா மித்துரைரா சேந்திராகேள்!

கோட்டுமரம் பீற்றல் குடை.

 

பாடல்பொருள்

       அடைக்கலம் என்று வந்து அடைந்தவர் விரும்பியதனை அளிக்கும் மன்னனே! (முத்துசாமித்துரை) கேட்பாயாக!

 

      கிளைகளை உடைய மரம், இளம் காய்களை உடையதாக இருக்கும்; மிக்க மழை பெய்தால் தாங்காது விழும்; அதனிடையே அமைந்த இடைவெளி வழியாக வெயில் வரும்.

 

       பழைய குடையானது, கழிந்திருக்கும்; பெருமழையைத் தாங்காது; துளைகள் வழியாக வெயில் உள்ளே செல்லும். எனவே, இத்தகைய காரணங்களால், பீற்றல் குடை, மரத்துக்கு ஒப்பானதாகும்.

 

சொல்பொருள்

கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்;

பீற்றல் குடை – பிய்ந்த குடை.

 

ஆசிரியர் குறிப்பு

      அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர். இருபத்தைந்துக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களை இயற்றியவர். இவர்தம் காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு.

 

நூல்குறிப்பு

     தனிப்பாடல் திரட்டில் இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல் ஒன்று பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.

 

        ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது சிலேடை எனப்படும். இதனை, ‘இரட்டுறமொழிதல்’ எனவும் கூறுவர். இரண்டு + உற + மொழிதல் – இரட்டுறமொழிதல். இருபொருள்படப் பாடுவது.

(எ.கா.) ஆறு

    ஆறு என்பது நீர் ஓடுகின்ற ஆற்றைக் குறிக்கும்.

    எண் ஆறனையும் (6) குறிக்கும்.

    செல்லும் வழியையும் குறிக்கும்.


No comments:

Post a Comment