Latest Government Jobs and updates

Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 7 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 6ம் வகுப்பு

           இயல் 7

உரைநடை   (Source TN Textbook)

கல்லிலே கலைவண்ணம்




மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இது கல்லில் செதுக்கிய சிற்பம். உற்றுநோக்கினால், இந்தச் சிற்பத்தில் உள்ள வியப்புறு உருவங்கள் வெளிப்படும். ம்ம்... தெரிகிறதா? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம். இடப்பக்கத்திலிருந்து பார்த்தால், காளையின் உருவம் தெரிகிறது. வலப்பக்கத்திலிருந்து பார்த்தால், யானையின் உருவம் தெரிகிறது.

 

       நன்றாகச் சொன்னீர்கள். எவ்வளவு அருமையாக இருக்கிறது! கலைஞர்கள் இதுபோன்று பல சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள். அவை எங்கே இருக்கின்றன என்றுதானே கேட்கிறீர்கள்! வாருங்கள்... சொல்கிறேன்.      

 

    

       காவிரி பாயும் சோழவள நாடு. அது கலைகளின் விளைநிலம். வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம். இவ்வூரின் தென்புறம் அரசிலாறு பாய்கிறது. இதன் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கேதான் ஐராவதீசுவரர் கோவில் உள்ளது. இஃது ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.

 

      நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோவில் நமக்குத் தருகிறது. இவ்வளாகத்தில் எங்கும் சிற்பமயம். இக்கோவில் சிற்பங்கள் நம்மைச் சுண்டியிழுக்கும்.

 

     இக்காலத்தில் அரசலாறு என வழங்கப்படுகிறது.

 

     ஒவ்வொரு சிற்பத்திலும் ஒரு கதையோ காவியமோ பொதிந்திருக்கிறது. முப்புரம் எரித்தவன் (திரிபுராந்தகன்) கதை ஒரு சிற்பம்; யானையைக் கொன்று அதன் தோலைத் தன்மீது உடுத்திக்கொள்ளும் யானை உரி போர்த்தவர் (கஜசம்ஹார மூர்த்தி) கதை இன்னொரு சிற்பம்; அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் (லிங்கோத்பவர்) கதை மற்றொரு சிற்பம். இப்படிக் கதைபொதிந்த சிற்பங்கள் பல உள்ளன.

 

     இராமாயண, மகாபாரதக் கதைகள், இரதி மன்மதன் கதைகள், சிவபுராணக் கதைகள் என எண்ணில் அடங்காத கதைகள் நம்மை ஈர்க்கின்றன. அவற்றுடன் பரதநாட்டிய அடவுகளும் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன.

 

     அன்னம் பாலிக்கும் அற்புத அன்னபூரணி, இன்றைய கண்தானத்துக்கு அன்றே எடுத்துக்காட்டாக அமைந்த கண்ணப்பர், பறவை, விலங்கு, மனிதன் எனக் கலவையாய் அமைந்த ஓருடல் சிற்பங்கள் என, இக்கோவில் சிற்பங்கள் தமிழகச் சிற்பக்கலைச் சிறப்புக்கு ஒரு சோற்றுப்பதமாய் விளங்குகின்றன.

 

     ஒவ்வொரு தூணின் நான்கு பட்டைகளிலும் அமைந்த சிற்றோவியங்கள் அரிதும் அழகுமாய் ஆனவை. கோவிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள் ‘சரிகமபதநி’ என்னும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்துக்குள் நுழைந்தாலே, எங்கும் இசையொலி, ‘தாம்தரிகிட தீம்தரிகிட’ என்னும் மத்தள லய ஒலி, வீணையின் மீட்டொலி, புல்லாங்குழலின் கான ஒலி, நாகசுர நல்லொலி... என இசைமழையில் நனையும் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

 

      தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கார்ல் சேகன் (Carl Sagon) என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

     அதிபத்தர், அமர்நீதியார், இயற்பகையார், இசைஞானியார், எறிபத்தர், ஏனாதிநாயனார் முதலிய அறுபத்துமூன்று நாயன்மார்களின் கதைகளைக் கூறும் கல்வெட்டு எழுத்துத் தலைப்புகளுடன் கூடிய புடைப்புச் சிற்பங்கள் கண்ணுக்குப் பெருவிருந்தாக உள்ளன.

 

     தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமானது இக்கோவில். அழகு வாய்ந்த இதன் பழைமையைத் தற்போது மத்தியத் தொல்பொருள் துறையினர் பாதுகாத்து வருகின்றனர். இதனை மரபு அடையாளச் சின்னமாக யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு அறிவித்துள்ளது. ஒற்றைவரியில் இதனைக் ‘கலைகளின் புகலிடம்’ எனலாம்.

No comments:

Post a Comment