Latest Government Jobs and updates

Tuesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 - Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 1 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 1

உரைநடை      (Source TN Textbook)

தமிழ்த்தாத்தா உ.வே.சா.

 

‘’ஐயா... ஐயா...’’

 

   வெளியில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு வீட்டுக்குள் இருந்த முதியவர் வாசலுக்கு வந்தார். யாரோ உதவி கேட்டுத்தான் வந்திருப்பார் என்று நினைத்து வந்தவருக்கு வியப்பு. வாசலில் நின்றவரைப் பார்த்தால், அவர் பெரிய மனிதராகவும் நல்ல படிப்பாளியாகவும் தெரிந்தார். அவர் முகத்தில் அப்படியொரு தெளிவு இருந்தது.

 

  ‘’என்ன வேண்டும்?’’ என்று வீட்டுக்காரர் கேட்டார்.

 

  ‘’தங்கள் வீட்டில் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய இருப்பதாகக் கேள்விப்பட்டு வந்தேன். அவற்றில், தமிழ்மொழியின் சிறந்த இலக்கியங்கள் இருக்கலாம். ஓலைச்சுவடியில் உள்ளனவற்றை எல்லாம் எழுதிப் புத்தகமாக அச்சிட்டு வருகிறேன். உங்கள் வீட்டில் உள்ள சுவடிகளைக் கொடுத்தால், அவற்றைப் பார்த்து எழுதிவிட்டுத் திருப்பித் தந்துவிடுவேன். இந்த உதவியை மறுக்காமல் தாங்கள் செய்தல் வேண்டும்’’ என்று வந்த பெரியவர் கூறினார்.

 

  இதனைக் கேட்ட வீட்டுக்காரருக்குச் சினம் வந்துவிட்டது.

 

  ‘’நாளை ஆடிப்பெருக்கு. விடியற்காலையில் ஆற்றில் விடுவதற்காக வீட்டில் கொஞ்சம் ஓலைச்சுவடிகள் வைத்திருக்கிறேன். அது பொறுக்கவில்லையா உமக்கு?’’ என்று கத்தினார்.

 

   ‘’ஓலைச்சுவடிகளைப் படிக்கவேண்டுமே தவிர, அவற்றை ஏன் ஆற்றில் விடவேண்டும்...?’’ என்று வந்தவர் கேட்டார்.

 

   வீட்டுக்காரர் மேலும் சினம் கொண்டார். ‘’அஃது உமக்குத் தேவையில்லாதது. ஆடிப்பெருக்கு நாளில் சுவடிகளை ஆற்றில் விட்டால் புண்ணியம் என்பது சாத்திரம். அவற்றை எல்லாம் கொடுக்கக்கூடாது’’ எனக் கூறி, வந்தவரை விரட்டினார்.

 

   பெரியவர், வீட்டுக்காரரிடம் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும், அவர் ஓலைச்சுவடிகளைத் தர ஒத்துக்கொள்ளவில்லை. வந்தவரோ அதற்காக மனம் தளரவில்லை; அந்த ஊரைவிட்டும் செல்லவில்லை. அந்த வீட்டுக்காரருக்குத் தெரியாமல், அன்றிரவு வேறொரு வீட்டுத்திண்ணையில் படுத்துக்கொண்டார். குளிரும் பனியும் அவரை வாட்டின.

 

   விடியற்காலையில் கோழி கூவியதும் அந்த வீட்டுக்காரர் ஓலைச்சுவடிகளுடன் ஆற்றுக்குச் செல்வதனைப் பார்த்தார் அந்த பெரியவர்; அவரைப் பின்தொடர்ந்து மறைந்து மறைந்து சென்று, ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நடப்பதனை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தார்.

 

   வீட்டுக்காரர் நீராடியபின், ஓலைச்சுவடிகளை ஆற்றில்விட்டுச் சென்றார். அவர் விட்டுச்சென்ற ஓலைச்சுவடிகளை அப்பெரியவர் தேடி எடுத்தார். அவற்றில் இருந்த ஈரத்தைத் தன் வேட்டியால் துடைத்தார். அங்கேயே சுவடிகளை வாசிக்கத் தொடங்கினார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. அவர் தேடித்தேடி அலைந்த அருந்தமிழ் இலக்கியங்கள் சில அச்சுவடிகளில் இருந்தன. (இந்த நிகழ்வு இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் நடைப்பெற்றது.) அந்தப் பெரியவரே உ.வே.சாமிநாதர்.

 

    அந்தக் காலத்தில் தாளோ எழுதுகோலோ இல்லை. பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர். அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு ‘ஓலைச்சுவடி’ என்று பெயர். அக்காலத்தில் இலக்கியங்களும் இலக்கணங்களும் ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டன. ஆணியால் ஓலையில் எழுதும்போது, ஓலை கிழியாமல் எழுதுதல் வேண்டும். அதனால், ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது. பேரன் என்பதனைப் பெரன என்றும் வாசிக்கலாம். பேரன என்றும் வாசிக்கலாம். முன்னும் பின்னும் உள்ள வரிகளை வைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

 

    பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பதற்காக, உ.வே.சா. வெவ்வேறு சுவடிகளை வைத்துப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்த பின்னரே, அவற்றை அச்சுக்கு அனுப்பினார். அவ்வாறு எழுதப்பட்ட சுவடிகளை வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி, அச்சிட்டுப் புத்தகமாக வழங்கினார் உ.வே.சாமிநாதர். நாம் அவ்விலக்கியங்களைப் படிப்பதற்காக அவர் ஓய்வின்றி உழைத்தார். அதனால், அவரைத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. என்று அன்போடும் உரிமையோடும் நாம் அழைக்கிறோம்.

 

     ‘குறிஞ்சிப்பாட்டு’ என்னும் சுவடியை அச்சில் பதிப்பிப்பதற்காக எழுதிக் கொண்டிருந்தார். அச்சுவடியில் தொண்ணூற்று ஒன்பது வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன. அவற்றுள், தொண்ணூற்று ஆறு பூக்களுடைய பெயர்கள் மட்டுமே தெளிவாக இருந்தன; மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவாக இல்லை. ஆனால், மூன்றே மூன்று பூக்கள் தானே தெரியவில்லை என அவர் விட்டுவிடவில்லை. அந்தப் பூக்களின் பெயர்கள் தெளிவாக உள்ள சுவடி யாரிடமாவது இருக்காதா என்று மறுபடியும் ஊர்ஊராக, வீடுவீடாகத் தேடிச் சென்றார். (குறிஞ்சிப்பாட்டு – பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்) பல மாதங்கள் கழித்து, அவர் தேடிய பூக்களின் பெயர்கள் உள்ள சுவடி ஒன்று கிடைத்தது. அதன் பிறகே அந்நூலை அச்சுக்குக் கொடுத்தார். எதனையும் அரைகுறையாகச் செய்ய விரும்பாத சுறுசுறுப்பான அந்தத் தாத்தா, தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியை மேற்கொண்டார்.

 

   அவர் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம். அவருடைய இயற்பெயர் வேங்கடரத்தினம். அவருடைய ஆசிரியரின் பெயர் மகாவித்துவான்மீனாட்சிசுந்தரம். அவருடைய ஆசிரியர் அவருக்கு வைத்த பெயர் சாமிநாதன். அதனால் அவர், உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன் என்பதன் சுருக்கமாகவே உ.வே.சா. என்று அழைக்கப்பட்டார். 19.02.1855 ஆம் ஆண்டு பிறந்த அவர், 28.04.1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

 

    தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

 

   அவர் தொடங்கிய தமிழ்ப்பணி இன்னும் முழுமை அடையவில்லை. அவருடைய பேரப்பிள்ளைகளான நாமும் அப்பணியைத் தொடர்வோம்.

 

சிறப்புக் குறிப்புகள்

 

v  உ.வே.சா அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

v  உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணிகளை வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

v  நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.  

No comments:

Post a Comment