Friday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 8 - உரைநடை

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 8

உரைநடை   (Source TN Textbook)

தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்

                      வீடு

 

“மலர்...”

அப்பா அழைத்தார்.

“என்னப்பா?” என்றாள் மலர். மலர், ஆறாம் வகுப்புப் படிக்கிறாள்.

“போஸ்ட் ஆபீஸ் வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வர்றியா?” என்றார் அப்பா.

மலர், அவரை முறைத்தாள்.

“அஞ்சல் நிலையம்’னு சொல்லத் தெரியாதா உங்களுக்கு?” என்று கேட்டாள்.

“தெரியும்மா. ஆனா, சொல்லத் தயக்கமா இருக்கு. யாரும் சிரிப்பார்களோன்னு பயமா இருக்கு” என்றார் அப்பா.

“இதற்கு பேரு தாழ்வுமனப்பான்மையின்னு எங்க ஆசிரியர் சொன்னார்” என வெடுக்கெனச் சொன்னாள், மலர்.

“போஸ்ட் ஆபீஸே பழகிப் போச்சு” என்றார் அப்பா, மறுபடியும்.

“பழக்கத்தில் இருந்து விடுபடணும். நாமென்ன அடிமையான்னு எங்க ஆசிரியர் கேட்கிறார்!” எனக் கருத்தாடலைத் தொடர்ந்தாள் மலர்.

“படிப்படியா மாற்றிக் கொள்கிறேன். சரியா?” என்றார் அப்பா. 

தெரியும். ஆனால், பேசமாட்டோம். ஏன்?

டிவி – தொலைக்காட்சி

ரேடியோ – வானொலி

டிபன் - சிற்றுண்டி

டீ – தேநீர்

கரண்ட் – மின்சாரம்

டெலிபோன் – தோலைபேசி

ஃபேன் – மின்விசிறி

சேர் – நாற்காலி

லைட் – விளக்கு

தம்ளர் – குவளை

 

                வீதி

(அப்பாவும் மகளும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.)

 

அப்பா: மலர்... விரைவா வா! பஸ்ஸைப் பிடிக்கணும்.

மலர்: அப்பா! நீங்க சொன்னது மறந்து போச்சா?

அப்பா: என்ன சொன்னேன்?

மலர்: உங்களுக்குப் பத்து வயசு இருக்கும்போதே மதுரையில், ‘பெரியார் பேருந்து நிலையம்’னு பெயர்ப் பலகையில் படிச்சேன்னு சொன்னீங்க. இப்ப உங்களுக்கு வயசு நாற்பது.

அப்பா: நீ சொல்வது சரிதான். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேருந்துன்னு சொன்னா யாருக்கும் புரியாது. ஆனால், இப்ப எல்லாருக்கும் புரியுது. அதனால், ‘பேருந்து’ன்னே சொல்லலாம்!

மலர்: டிரெயினை ‘இரயில் வண்டி’ன்னு சொல்வது, சரிதானேப்பா!

அப்பா: தொடக்கத்தில் புகைவண்டின்னு சொன்னோம். கரியால் ஓடிய காலம் அது. புகையைக் கக்கிக்கொண்டு ஓடும். இன்றைக்கும் அப்படிச் சொல்வதில் தப்பில்லை. ‘புகைவண்டி’ன்னு சொல்லும்போது, அதன் வரலாறு நினைவுக்கு வரும். இரயிலைத் ‘தொடர்வண்டி’ எனச் சொல்லும் வழக்கமும் இருக்கிறது. போட்டோவைப் ‘புகைப்படம்’ என்றுதானே சொல்கிறோம்!

மலர்: அப்பா! பேருந்து வந்தாச்சு

தெரியும். ஆனால், பேசமாட்டோம். ஏன்?

சைக்கிள் – மிதிவண்டி

பிளாட்பாரம் – நடைமேடை

ஆபீஸ் – அலுவலகம்

சினிமா – திரைப்படம்

டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி

ரோடு – சாலை

பிளைட் – வானூர்தி

பேங்க் – வங்கி

தியேட்டர் – திரையரங்கு

ஆஸ்பத்திரி – மருத்துவமனை

 

                வகுப்பறை

 

“மலர்!”

ஆசிரியர் கூப்பிட்டார். மலர் எழுந்தாள்.

“போர்டை அழி” என்றார்.

“கரும்பலகையைத்தானே!” என்றாள் மலர் அடக்கமாக.

“அடடா! நானே மறந்துவிட்டேன். நாக்கில் களிம்புபோல ஓட்டிக்கிடக்குப் பழகிப்போன சொல்!” என்றார் ஆசிரியர்.

“களிம்பு எப்படிப் போகும்?” எனக் கேட்டாள், மலர்.

“எல்லாரும் உணர்ந்து பேசப் பேசக் களிம்பு கரையும்” என்றார், ஆசிரியர்.

அடுத்த நாள்...

(வருகைப் பதிவின்போது வேறொரு கருத்தாடல் நடந்தது.)

ஆசிரியர் பெயர் வாசித்தார்:

“ஆர்.அகிலா... எஸ்.அறிவு... எம்.இனியன்... என்.மலர்”

வாசித்து முடித்ததும் மலர் எழுந்து கேட்டாள்.

மலர்: பெயரின் முன்னெழுத்தை (இனிஷியல்) ஆங்கிலத்திலும் பெயரைத் தமிழிலும் இருமொழி கலந்து எழுதுகிறோமே, இது முறையா?

ஆசிரியர்: முறையற்றதுதான்! மொழி குறித்து நமக்குள்ள அக்கறையின்மைதான் இதற்குக் காரணம். ஏதேனும் ஒரு மொழியில்தான் பெயரையும் முன்னெழுத்தையும் எழுதுதல் வேண்டும். இந்த மாற்றத்தை நமது வகுப்பறையில் இருந்தே தொடங்கலாம். இனிமேல், பெயரையும் முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதுவது என நாம் உறுதிகொள்வோம்.

மாணவர்கள்: உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்!

அடுத்த நாள் வருகைப் பதிவு இப்படி நடந்தது...

“இரா.அகிலா... சு.அறிவு... மா.இனியன்... நா.மலர்”

(வகுப்பறையில் கொண்டாட்டம்)

தெரியும். ஆனால், பேசமாட்டோம். ஏன்?

கம்ப்யூட்டர் – கணினி

காலேஜ் – கல்லூரி

யுனிவர்சிட்டி – பல்கலைக்கழகம்

டெலஸ்கோப் – தொலைநோக்கி

தெர்மாமீட்டர் – வெப்பமானி

இன்டர்நெட் – இணையம்

ஸ்கூல் – பள்ளி

சயின்ஸ் – அறிவியல்

மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி

நம்பர் – எண்

 

 

            மீண்டும் வீடு

 

 

மலர்: அப்பா! பழக்கம் மாறுமா? மாற்றம் வருமா?

அப்பா: மாறும். என் அப்பா காலத்தில், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால், ‘நமஸ்காரம்’ எனச் சொல்வார்கள். இன்று அழகாகத் தமிழில், ‘வணக்கம்’ சொல்கிறார்கள். தொலைபேசியை எடுத்ததும் வணக்கம் சொல்கிறார்கள். ஸ்ரீராமன், ஸ்ரீமதி என எழுதும் வழக்கம் பெரும்பாலும் போய்விட்டது. திரு., திருமதி என்றுதான் எழுதுகிறோம். ’சர்வகலாசாலை’யைப் பல்கலைக்கழகம் என்றும், கவர்னரை, ‘ஆளுநர்’ என்றும் சொல்வது நடைமுறை ஆகிவிட்டது. ‘ஸ்வீட் ஸ்டால்’ இப்போது ‘இனிப்பகம்’ ஆகிவிட்டது. ‘டியூப் லைட் வாடகைக்குக் கிடைக்கும்’ என்னும் பெயர்ப்பலகை, ‘குழல் விளக்கு கிடைக்கும்’ என மாறி இருக்கிறது.

மலர்: பிறமொழிச்சொற்கள் பல இவ்வாறு மாறவில்லையே, ஏன்?

அப்பா: மக்கள் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். அது மிகவும் இன்றியமையாதது பேருந்துக்குக் கிடைத்த ஆதரவு, ‘மகிழுந்து’க்குக் (கார்) கிடைக்கவில்லை. தேநீருக்குக் (டீ) கிடைத்த ஆதரவு குளம்பி நீருக்குக் (காபி) கிடைக்கவில்லை. சைக்கிளை ‘ஈருருளி’ என அறிமுகப்படுத்த அறிஞர் சிலர் விரும்பினர். மக்கள் நாக்கில் ஈருருளி ஓட்டவில்லை. மிதிவண்டி ஒட்டியது. ‘மிதிவண்டி நிலையம்’ என்னும் பெயர்ப் பலகைகளைச் சிற்றூர்களில் இயல்பாகக் காண முடிகிறது. அறிஞர்கள் மொழிபெயர்த்துத் தருவனவற்றை மக்களும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

மலர்: தமிழ்ச்சொற்களை உருவாக்கும் முயற்சி தொடர்கிறதா?

அப்பா: ஆமாம்! முயற்சி தொடர்கிறது. நெகிழி (பிளாஸ்டிக்), ஊடகம் (மீடியா) எனக் கலைச்சொற்கள் அழகான தமிழில் வந்தபடி உள்ளன. வெற்றியும் பெறுகின்றன. உண்மையான முயற்சி வெற்றி பெறாமல் போகுமா...?

முதலில் வியப்பு... பின்னர்ப் படைப்பு

முதன்முதலாகப் பேருந்து, சாலைகளில் ஓடியபோது தமிழன் மலைத்துப் போய்ப் பாடினான்.

மோட்டாரு வண்டியாம்

முன்பக்கம் எந்திரமாம்

மாடில்லாம ஓடுதடி

   மாய வெள்ளைக்காரன் வண்டி.

 

இன்று தமிழனுக்குப் பேருந்தை இயக்கவும் தெரியும்; உருவாக்கவும் தெரியும். புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் கருவிகளுக்கும் இயந்திரங்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களைப் படைக்கும் முயற்சியும் ஒரு பக்கம் நடக்கிறது.

 

இந்த முயற்சிக்கு நாமும் ஒத்துழைப்போம். நாளும் தமிழ் வளர்ப்போம்.

 

 

 

 

     

 

   

No comments:

Post a Comment

கலாப்ரியா

GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி.சு...