Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2
Language I - Tamil
6ம் வகுப்பு
இயல் 3
உரைநடை (Source TN Textbook)
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
ஆராரோ
ஆரிரரோகண்ணே கண்மணியே
ஆரடிச்சு நீ அழுதே!
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிரரோ...
இந்தப் பாடலைக் கேட்காதவர்கள்
யாரும் இருக்க முடியுமா? இதனைத் தாலாட்டுப் பாடல் என்கிறோம். குழந்தையைத்
தொட்டிலில் இட்டுத் தாய் பாடும் பாட்டு இது.
பள்ளிக்கூடமே போகாத, எழுதப்
படிக்கத் தெரியாத தாய்மார்களுக்கும் இந்தத் தாலாட்டுப் பாடல் தெரிகிறதே! அஃது
எப்படி? அது மட்டுமன்றி, இந்தப் பாட்டை யாரும் எழுதிப் புத்தகமாகப் போட்டதும்
இல்லை. பிறகு எப்படி எல்லாத் தாய்மார்களுக்கும் இப்பாடல் மனப்பாடமாகத் தெரிகிறது?
ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது
கேட்டுக் கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனத்தில் வாங்கித் தானும்
பாடிப்பாடிப் பழகிவிடுகிறார். இப்படித் தாளில் எழுதாத பாடல்தான், ‘நாட்டுப்புறப்
பாடல்’ எனப்படுகிறது. எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுகிற
பாட்டு நாட்டுப்புறப்பாட்டு. இதேபோல் எழுதப்படாத, எல்லாருக்கும் தெரிந்த கதைகளும்
உண்டு. இவற்றை எல்லாம் ‘’வாய்மொழி இலக்கியம்’’ எனக் கூறுவார்கள்.
முன்னர், இப்பாடல்களைக் கிராமியப்
பாடல்கள் என்று கூறி வந்தார்கள். ஆனால், வாய்வழியாகப் பரவும் பாடல் சிற்றூர்களில்
மட்டும்தான் உண்டா? நகரங்களிலும் தாய்மார்கள் பாடுவது இல்லையா? சென்னை போன்ற
பெருநகரங்களிலும் மக்கள்பாடும் ‘கானாப் பாடல்’ கூட நாட்டுப்புறப் பாடல்கள்.
கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும்
நாட்டுப்புறப்பாடல்தான்.
கொழுக்கட்டை
கொழுக்கட்டை ஏன் வேகல?
அடுப்பு
எரியல நான் வேகல.
அடுப்பே
அடுப்பே ஏன் எரியல?
மழை பெய்தது
நான் எரியல.
மழையே மழையே
ஏன் பெய்தே?
புல்லு வளர
நான் பெய்தேன்.
புல்லே
புல்லே ஏன் வளர்ந்தே?
மாடு தின்ன
நான் வளர்ந்தேன்.
மாடே மாடே
ஏன் தின்றாய்?
மாட்டுக்காரன் அவிழ்த்துவிட்டான் நான் தின்றேன்.
மாட்டுக்காரா மாட்டுக்காரா ஏன் அவிழ்த்துவிட்டே?
குழந்தை
அழுதது நான் அவிழ்த்து விட்டேன்.
குழந்தை
குழந்தை ஏன் அழுதே?
எறும்பு
கடிச்சது நான் அழுதேன்.
எறும்பே
எறும்பே ஏன் கடிச்சே?
என்
புற்றிலே கால்வெச்சா, நான் சும்மா இருப்பேனா?
என்று குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பெருங்குரலெடுத்துப்
பாடும் விளையாட்டுப் பாடலும் நாட்டுப்புறப் பாடல்தான்.
இந்தப்
பாடல்களை யார் எழுதினார்கள் என்று யாராலும் கூறமுடியாது. ஏனெனில், இப்பாடல்களை
யாரும் எழுதவில்லை. மக்கள் தாமாகவே பாடவேண்டும் என்று தோன்றும்போது இப்பாடல்கள்
பாடப்படுகின்றன.
குழந்தையைக்
கொஞ்சவேண்டும் என்று தோன்றினால் தாலாட்டுப் பாட்டுத் தானாக வந்துவிடும்.
இறந்தவர்களைப் பார்த்ததும் அழுகை வந்துவிடும். அத்துடன், ஒரு துயரப் பாடலாக
ஒப்பாரியும் வந்துவிடும். அப்படிப் பாடுகிறவர் ஏற்கெனவே தான் எங்கோ கேட்ட பாடல்
வரிகளோடு தானும் சில வரியைச் சேர்த்துப் பாடிவிடுவார். இப்படியே நாட்டுப்புறப்
பாடல் வளர்ந்து கொண்டே போகும்.
ஒருவர்
பாடியதுபோல, அப்படியே இன்னொருவர் பாடுவது இல்லை. இது நாட்டுப்புறப் பாடல்களின்
தனிச்சிறப்பு. நாட்டுப்புறப் பாடல்களைக் கீழ்க்காணும் வகைகளாகப் பிரிக்கலாம்.
தாலாட்டுப்
பாடல்கள்
விளையாட்டுப் பாடல்கள்
தொழில்
பாடல்கள்
சடங்குப் பாடல்கள்
கொண்டாட்டப் பாடல்கள்
வழிப்பாட்டுப் பாடல்கள்
ஒப்பாரிப் பாடல்கள்
பிறந்த
குழந்தைக்குப் பாடுவது தாலாட்டுப் பாடல். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது
விளையாட்டுப் பாடல். களைப்பு நீங்க, வேலை செய்வோர் பாடுவது தொழில் பாடல். திருமணம்
மற்றும் பிற நிகழ்வுகளில் பாடுவது சடங்குப் பாடல், கொண்டாட்டப் பாடல். சாமி
கும்பிடுவோர் பாடுவது வழிபாட்டுப் பாடல். இறந்தோருக்குப் பாடுவது ஒப்பாரிப் பாடல்.
தமிழர் வாழ்வின்
ஒவ்வொரு நிலைக்கும் இப்படிப் பாடல்கள் உண்டு. எடுத்துக்காட்டுகளாகச் சில
பாடல்களைப் பார்க்கலாம்.
கொழும்புல கூடாரம் – உங்க மாமா
கொத்தமல்லி வியாபாரம் (ஆராரோ ஆரிரோ)
கொத்தமல்லி வித்தெடுத்து – உங்க
மாமன்
கொலுசு பண்ணி வாராராம் (ஆராரோ
ஆரிரோ)
மதுரையிலே கூடாரம் – உங்க மாமா
மல்லியப்பூ வியாபாரம் (ஆராரோ
ஆரிரோ)
மல்லியப்பூ பூவெடுத்து – உங்க மாமா
மாலை பண்ணி வாராராம் – (ஆராரோ
ஆரிரோ)
இவ்வாறு தாலாட்டுகளில் தாய்மார்கள், தங்கள் அண்ணன் தம்பிகளின் பெருமைகளைப்
பாடுவது வழக்கம்.
சாஞ்சடம்மா சாஞ்சாடு
சாயக்கிளியே சாஞ்சாடு
குத்துவிளக்கே சாஞ்சாடு
கோவில் புறாவே சாஞ்சாடு
மானே மயிலே சாஞ்சாடு
மாடப்புறாவே சாஞ்சாடு...
இது குழந்தையாக இருக்கும்போது சாய்ந்தாடச் சொல்லும்
விளையாட்டுப் பாடல்.
வெள்ளிப்பிடி அருவா
ஏ! விடலைப் பிள்ளை கை அருவா
சொல்லி யடிச்சருவா – இப்போ
சுழட்டுதடி நெல்கதிரெ...
என்று அறுவடை செய்யப் போகும்
பெண்கள் பாடிக்கொண்டு செல்வார்கள். துணி வெளுக்கும் தொழில் செய்வோர்:
சோ... சோ...
அழுக்குத் துணியே
சோ... சோ...
அடிச்சுத்
துவைச்சி...
சோ... சோ...
இறுக்கிப் பிழிஞ்சி
சோ... சோ...
காயப்போடு
சோ... சோ...
என்று வேலையின்போது களைப்புத் தெரியாமல் இருக்க இவ்வாறு
பாடுகிறார்கள். ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் தனித்தனியே
பாட்டு உண்டு.
நாட்டுப்புறப்
பாடல்களில் விழிப்புணர்வுப் பாடல்களும் உள்ளன.
ஊரான் ஊரான்
தோட்டத்திலே
ஒருத்தன்
போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு
விக்கச் சொல்லி
காயிதம்
போட்டானாம் வெள்ளக்காரன்
என்ற பாடல், நமது நாட்டு விடுதலைப் போராட்டக் காலத்தில்
உருவான நாட்டுப்பாடல்.
உங்கள் ஊரில்,
உங்கள் தெருவில், உங்கள் வீட்டில் இப்படிப் பாடல்கள் தெரிந்த பாட்டிகள்,
தாத்தாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள் யாராவது இருப்பார்கள்.
அவர்களிடம் கேட்டுப் பாடல்களை எழுதிக் கொண்டு வந்து, அவர்கள் பாடியதுபோலவே
வகுப்பில் பாடிக்காட்டுங்கள்.
நன்றாகப்
பாடுபவரை வகுப்பில் உள்ள எல்லாரும் சேர்ந்து பாராட்டுங்கள்.
No comments:
Post a Comment