Latest Government Jobs and updates

Monday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 2 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 2

துணைப்பாடம்   (Source TN Textbook)

பாம்புகள்

 

     பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தாள் அமுதா. புத்தகப் பையை மேசையின்மீது வைத்தாள். வீட்டில், செழியன் ஏதோ எழுதிக்கொண்டு இருந்தான். அவனருகே சென்றாள்.

 

அமுதா: அண்ணா... எனக்கோர் உதவி செய்வாயா? (எழுதுவதனை நிறுத்திவிட்டு, ‘என்ன’ என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தான் செழியன்.) அடுத்தவாரம் எங்கள் பள்ளியில் சென்னைக் கிண்டியிலுள்ள பாம்புப் பண்ணைக்கு அழைத்துச் செல்கிறார்கள் அண்ணா... பாம்பைப் பற்றி உனக்குத் தெரிந்ததனைச் சொல்லேன்...!

செழியன்: ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்று சொல்வார்கள்.

அமுதா: அதுதான் தெரியுமே. வேறு ஏதாவது...

செழியன்: ம்ம்... பாம்பு பற்றித்தானே! பாம்புகள் ஊர்வன வகையைச் சார்ந்தவை. பெரும்பாலான பாம்புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பன. சில பாம்புகள் மட்டும் குட்டிபோடும்.

அமுதா: சுவையான வேறு செய்தி இருந்தால் சொல்!

செழியன்: இந்த நாளிதழில் இருக்கிறது படிக்கிறேன், கேள்... உலகம் முழுக்க ஈராயிரத்து எழுநூற்று ஐம்பது வகைப்பாம்புகள் இருக்கின்றனவாம். இந்தியாவில் மட்டும் இருநூற்று நாற்பத்து நான்கு வகைப்பாம்புகள் இருக்கின்றனவாம்.

அமுதா: அப்படியா!

செழியன்: மேலும், பாம்பு வகைகளில் ஐம்பத்திரண்டு வகைப்பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உண்டாம்.

 

(அப்போது, வீட்டிற்குள் வந்த அம்மாவின் முகத்தில் அலுவலகம் சென்று வந்த களைப்பு.)

 

அம்மா: என்ன, அண்ணனும் தங்கையும் கடுமையாகக் கலந்துரையாடிக் கொண்டு இருக்கிறீர்கள்?

செழியன்: பாம்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம்!

அம்மா: ஓ... அப்படியா! முதலில் பாம்புபற்றி நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

பாம்பு, பால் குடிக்குமா? குடிக்காதா?

அமுதா: குடிக்காது.

செழியன்: பாம்பு விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்குப் போதும்.

அம்மா: உனக்கு யார் சொன்னது, செழியா?

செழியன்: எங்கள் ஆசிரியர் சொன்னார்.

அம்மா: சரிதான். அப்புறம், நல்ல பாம்பின் தலையில் மாணிக்கக்கற்கள் வைத்திருக்கிறதென்று சொல்வது வெறுங்கட்டுக்கதை. பாம்பு, தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருப்பது எதற்குத் தெரியுமா?

செழியன்: இதுகூடத் தெரியாதா? அடிக்க வருபவர்களைக் கடிக்கத்தான்.

அம்மா: அப்படியில்லை. பாம்பு, தான் பிடிக்கும் இரையைக் கொல்லவும், செரிப்பதற்காகவும்தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்திருக்கிறது.

அமுதா: கேட்கவே வியப்பாக இருக்கிறதே! பாம்புக்குக் காது இருக்கிறதா?

அம்மா: பாம்புக்குக் காது அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. காற்றில் வரும் ஓசைகளைப் பாம்பினால் கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.

செழியன்: அப்புறம் எப்படி, பாம்பாட்டியின் மகுடி ஓசையைக் கேட்டுப் பாம்பு ஆடுகிறது?

அம்மா: பாம்பு, மகுடி இசைக்கு ஆடவில்லை. மகுடி வாசிக்கிறவரைக் கண்ணால் பார்க்கிறது. மகுடி அசைவதனைப் போலப் பாம்பும் அதனைப் பார்த்து அசைந்தாடுகிறது. அவ்வளவுதான்.

அமுதா: ‘பாம்பு, உழவர்களின் நண்பன்’ என ஒரு புத்தகத்தில் படித்தேன். பாம்பு, எப்படி நண்பனாக முடியும்?

அம்மா: பாம்புகளால் உழவர்களுக்குப் பெரிய நன்மைகள் இருக்கின்றன. வயலில் உள்ள பயிர்களை எலிகள் அழிக்கின்றன. எலிகளை அழிப்பதில் பாம்புகளுக்குப் பெரும்பங்கு உண்டு.

 

(அப்போது செல்பேசி மணி ஒலிக்கிறது. அம்மா, அதனைக் கைப்பையிலிருந்து எடுத்துப் பேசினார்.)

 

அம்மா: சொல்லுங்க... ம்ம்... அப்படியா! அச்சச்சோ... நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன், சரிங்க.

செழியன்: யாரம்மா...?

அம்மா: அப்பாதான். உங்கள் மாமாவின் பையன் செல்வத்தைப் பாம்பு கடித்து விட்டதாம். மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றுள்ளார்களாம். அப்பாவும் செல்வத்தைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொன்னார்.

அமுதா: இப்பொழுதுதான் அண்ணன், நச்சுப்பாம்புகள் குறைவாக இருப்பதாகச் சொன்னான். அதற்குள் ஒரு பாம்புக்கடிச் செய்தியா?

அம்மா: அப்படி இல்லை. பாம்பு, யாரையும் தேடிப்போய்க் கடிப்பது இல்லை. மனிதர்களால் தனக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டால்தான் கடிக்கும். பாம்புக்கடியினால் இறந்தவர்களைவிட, அச்சத்திலும் அதிர்ச்சியிலும் இறந்தவர்களே மிகுதி.

செழியன்: பாம்புக்கடிக்கு ஆளானவர்களுக்கு முதலுதவியாக என்ன செய்தல் வேண்டும்?

அம்மா: பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும். கடிபட்ட இடத்திற்குமேல் உடனடியாகக் கட்டுப்போட்டுப் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் செல்லுதல் வேண்டும். நச்சுமுறிவு மருந்து கொடுத்தல் வேண்டும். இதுவே முறையான முதலுதவி.

அமுதா: இதனை எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது.

அம்மா: முதலில் பாம்பைக் கண்டாலே அடித்துக் கொல்லவேண்டும் என நினைக்கவே கூடாது. பாம்பினால் எந்தத் தொல்லையும் நமக்குக் கிடையாது. அதுவும் ஓர் உயிர்தான் என்று புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

செழியன்: அம்மா மிகவும் களைத்துக் காணப்படுகிறார். நானும் தோட்டத்திற்குச் செல்கிறேன். அடுத்தவாரம் நீ சுற்றலாவுக்குச் சென்று வா. பாம்பைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்வாய்.

அமுதா: பாம்பு அடிக்கடி நாக்கை நீட்டுகிறதே, ஏன்? (அம்மா. ‘தெரியாது’ என்பதாகத் தலையாட்டியபடி எழுந்து சென்றார்.)

 

(செழியன் இருக்கையைவிட்டு எழுந்தான். கையை வளைத்து, ‘புஸ்... புஸ்...’ என்று பாம்புபோல் ஒலியெழுப்பிக்கொண்டே தோட்டத்துப் பக்கம் ஓடினான்.)


No comments:

Post a Comment