Latest Government Jobs and updates

Wednesday

TNPSC Tamil - பத்துபாட்டு – சிறுபாணாற்றுப்படை

 

பத்துபாட்டு – சிறுபாணாற்றுப்படை        (Source TN Textbook)

 

பேகன் – (பொதினி மலை)

வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகனும்

 

பாரி (பறம்பு மலை)

        …… சுரும்பு உண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்குவெள் அருவி வீழும் சாரல்

பறம்பின் கோமான் பாரியும்

 

காரி (மலையமான் நாடு)

            …… கறங்குமணி

வாலுளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த

அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

கழல்தொடித் தடக்கைக் காரியும்

                                

ஆய் (பொதியமலை)

           …… நிழல் திகழ்

நீலம், நாகம் நல்கிய கலிங்கம்

ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த

சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள்

ஆர்வ நன்மொழி ஆயும்; …

 

அதிகன் (தகடூர்)

       ……. மால்வரைக்

கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி

அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த

உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் 

அரவக் கடல் தானைஅதிகனும்

 

நள்ளி (நளிமலை)

         ….. ….. கரவாது

நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம்

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்

துளிமழைபொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு

நளிமலை நாடன் நள்ளியும்

ஓரி (கொல்லிமலை)

            ….…..….. நளிசினை

நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்

குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த

காரிக் குதிரைக் காரியொடு மலைந்த

ஓரிக் குதிரைஓரியும்

இவர்களோடு நல்லியக்கோடன்.

             ……… என ஆங்கு

எழுசமங் கடந்த எழு உறழ் திணிதோள்

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

விரிகடல் வேலி வியலகம் விளங்க

ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள்

பாவகை: நேரிசைஆசிரியப்பா

பாடல் விளக்கம்:

 

    பருவம் பொயக்காமல் மழை பெய்யும் வளமலையில் வாழும் மயிலுக்குப் பேகன் (அது குளிரால் நடுங்கும் என்று எண்ணித் தன் மனத்தில் சுரந்த அருளினால்) தன்னுடைய ஆடையைக் கொடுத்தான். இவன் வலிமை வாய்ந்த ஆவியர் குலத்தில் தோன்றியவன்; பெரிய மலை நாட்டுக்கு உரியவன்; வலிமையும் பெருந்தன்மையும் நற்பண்பும் கொண்டவன்; பொதினி மலைக்குத்தலைவன்.

  

     வண்டுகள் உண்ணும்வண்ணம் நல்ல தேனை மிகுதியாகக் கொண்ட மலர்களைச் சிந்தும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடுவழியில், மலர்களையுடைய (கொம்பின்றித் தவித்துக் கொண்டிருந்தது) முல்லைக்கொடியொன்று பற்றிப்படரத் தான் ஏறிவந்தபெரிய தேரினை ஈந்தவன் பாரி. அவன், வெள்ளிய அருவிகளைக் கொண்ட பறம்புமலையின் தலைவன்.

     

         உலகம் வியக்கும்படி வெண்மையான பிடரியுடன் தலையை ஆட்டும் குதிரைகளையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லையென்னாமல் கொடுப்பவன் காரி என்னும் வள்ளல். இவன், பகைவர் அஞ்சக் கூடிய வகையில் நெருப்பைப் போல் சுடர்விடுகின்றநீண்ட வேலினையும் வீரக்கழலையும் உடையவன்; தோள்வளையை அணிந்த நீண்ட கைகளை உடையவன்.

      

         ஒளிமிக்க நீல வண்ணக் கல்லையும் நாகம் கொடுத்த ஆடையினையும் மன விருப்பம் கொண்டு ஆலின்கீழ் அமர்ந்த இறைவனுக்குக் கொடுத்தவன், ஆய் என்னும் வள்ளல். இவன் வில் ஏந்தியவன்; சந்தனம் பூசி உலரந்த தோள்களை உடையவன்; ஆரவத்துடன் இனிமையான மொழிகளைப் பேசுபவன்.

      

        நறுமணம் கமழும் பெரிய மலைலச்சாரலில் இருந்த அழகுமிக்க நெல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின் தன்மையுடையது. அது தனக்குக் கிடைக்கப் பெற்றபோதுத, அதனை (தான் உண்ணாமல்) ஔவைக்கு வழங்கியவன் அதிகன் என்னும் வள்ளல்; வலிமையும் சினமும் ஒளியும்மிக்க வேலினை உடையவன்: கடல் போன்று ஒலிக்கும் படையினையும் உடையவன்.                                         

 

     நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட் செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு இனிய வாழ்விற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் குறிப்பறிந்து வழங்கும் பெரிய கைகளை உடையவன். இவன் காலந்தவறாமல் பெய்யும் மழை போன்றவன்; போர்த் தொழிலில் வல்லமையுடையவன்; மழைக்காற்று எப்போதும் இருக்கக்கூடிய உயர்ந்த மலை நாட்டை உடையவன். 

     

        செறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த, சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். இவன் காரி என்னும் வலிமைமிக்க குதிரையைக் கொண்ட காரி என்பவனை எதிர்த்து நின்று அஞ்சாமல் போரிட்டவன்; ஓரி என்னும் வலிமைமிக்க குதிரையைத் தன்னிடத்தில் கொண்டவன்.

   

      மேலே குறிப்பிட்ட ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர்; ஆனால் நல்லியக் கோடன், தானே தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்துச் செல்லும் வலிமை உடையவன்.

No comments:

Post a Comment