Latest Government Jobs and updates

Wednesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 7ம் வகுப்பு - இயல் 1 - உரைநடை

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

7ம் வகுப்பு  

           இயல் 1

உரைநடை   (Source TN Textbook)

செம்மொழித் தமிழ்

உலக மொழிகள்

    உலகத்தில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சுமொழிகளே. எழுத்துமொழிகளாக உள்ளனவற்றுள் இலக்கிய வளம் நிறைந்தவை மிகச் சிலவே. எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று வள்ளலார் அருள்கிறார். உலக மொழிகளில் சிறந்தது தமிழ்மொழியே என அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

 

செம்மொழிகள்

   திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.

 

   இவற்றுள் கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், ஆகிய மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லை.

 

செம்மொழித் தமிழின் சிறப்பு

      உலகில் இன்று வழங்கும் மொழிகள் தோன்றுவதற்கு முன்பாகவே எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களைக் கொண்டதாக விளங்கியது தமிழ்மொழி.

 

      தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள் ஆகிய செவ்வியல் இலக்கியங்கள், தமிழைச் செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாகத் திகழ்கின்றன.

 

    பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான திருக்குறளுக்கு இணையான வேறு நூல் உலகில் இல்லை.

 

    அதனால்தான் டாக்டர் கிறௌல், தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார்.

 

தமிழின் தனிப்பெருந்தன்மைகள்

    இயல்பாகத் தோன்றிய தமிழ்மொழியின் உயரிய பண்புகள், தன்மைகள் பற்றி ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

அ) தொன்மை

        உலகின் மிகப்பழைமையான நிலப்பகுதி குமரிக்கண்டம். அந்நிலப்பகுதி கடல்கோளால் மூழ்கிவிட்டது. அத்தொன்னிலத்தில்தான் தமிழ் தோன்றியதெனத் தண்டியலங்கார மேற்கோள் செய்யுள் கூறுகிறது.

 

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது

தன்னே ரிலாத தமிழ்.

 

ஆ) மென்மை

        தமிழ் மெல்லோசை மொழியாயிருப்பதனாலேயே, அஃது உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகின்றது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவரும் முயற்சி வருத்தமின்றி எளிதாக அதனைக் கற்கவும் பேசவும் இயலுகின்றது. எக்காலத்தும் உள்ளத்தில் எழக்கூடிய கருத்துகளை எல்லாம் தெரிவிக்கத்தக்க சொற்களைக் கொண்டதாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

 

இ) தாய்மை

     பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில்நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன. தமிழ்ச்சொல் இல்லாத உலகப் பெருமொழி யாதொன்றும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஈ) தூய்மை

      தமிழில் வழங்கிய ஆயிரக்கணக்கான பேச்சு வழக்குச் சொற்களும், நூல்வழக்குச் சொற்களும் காலவெள்ளத்தில் மறைந்து போயின. எஞ்சியுள்ள பழஞ்சொற்களைக் கொண்டும் தேவைக்கேற்பப் புதுச் சொற்களைப் புனைந்தும் பிறமொழித் துணையின்றித் தமிழால் தனித்து இயங்க இயலும். இவ்வுண்மையை அறிந்தே, தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல்.

 

உ) செம்மை

       மக்களுக்கு ஒழுக்க வரம்பு தேவையானது போலவே மொழிக்கு இலக்கண வரம்பும் சொற்களுக்குத் திருந்திய வடிவம் இன்றியமையாதன. இவற்றைத் தமிழில் உள்ளதுபோல், வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், செந்தமிழ் எனப்பட்டது.

 

ஊ) மும்மை

      முதற்சங்கத்திலிருந்தே இசையும் நாடகமும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று. முதலிரு சங்கத்திலும் வழங்கிய இலக்கண நூல்கள் முத்தமிழ் பற்றியனவாகவே இருந்தன.

 

எ) இயற்கை வளர்ச்சி

          எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய நூற்பா. தமிழில் இடுகுறிப் பெயர்கள் மிகவும் குறைவு. ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு. ஆனால், வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன. தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை. ஆனால், பிறமொழிகளில் இத்தகைய பகுப்புமுறை இல்லை.

 

ஏ) இலக்கண நிறைவு

       எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது. 

 

ஐ) செய்யுள் சிறப்பு

       பண்டையத் தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் செய்யுள் வடிவிலேயே இருந்தன. கலிப்பா முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

 

ஒ) அணிச்சிறப்பு

       புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க உவமை, உருவகம் முதலிய அணிகளைப் பயன்படுத்திப் பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

 

ஓ) நூல் சிறப்பு

      ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இயற்கைச் சீற்றங்களால் அழிந்துபோயின. கிடைத்தனவற்றுள் சங்ககால நூல்கள் தமிழர்தம் மொழியையும் பண்பாட்டையும் விளக்குவனவகாத் திகழ்கின்றன.

 

     இத்தகைய விழுமிய வியத்தகு பண்பாடுகளையும் நூல்களையும் கொண்டது தமிழ்மொழி. அத்தகைய உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியை உணர்ந்து கற்றுப் போற்றிக் காப்போம்.

Tuesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 8ம் வகுப்பு - இலக்கணம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

8ம் வகுப்பு  

           இலக்கணம்   (Source TN Textbook)

இயல் 1

Part I


இயல் 2

இயல் 3

Thursday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 7ம் வகுப்பு - இயல் 1

  Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 

         7ம் வகுப்பு

           இயல் 1  (Source TN Textbook)

செய்யுள்

உரைநடை

இலக்கணம்


Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 7ம் வகுப்பு - இயல் 1 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 

         7ம் வகுப்பு

           இயல் 1

செய்யுள்  (Source TN Textbook)

வாழ்த்து

பண்ணினை இயற்கை வைத்த                                         பண்பனே போற்றி போற்றி                                        பெண்மையில் தாய்மை வைத்த                                        பெரியனே போற்றி போற்றி                                              வண்மையை உயிரில்வைத்த                                             வள்ளலே போற்றி போற்றி                                         உண்மையில் இருக்கை வைத்த                                        உறவனே போற்றி போற்றி.

பொருள்:                                                                         இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மைபால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே! கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன்.

சொற்பொருள்:                                                               பண் – இசை;                                                                 வண்மை – கொடைத்தன்மை;                                       போற்றி – வாழ்த்துகிறேன்.

ஆசிரியர் குறிப்பு

பெயர்:

திரு.வி.கலியாணாசுந்தரனார் (திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது.)

பெற்றோர்:

  விருத்தாசலனார் – சின்னம்மையார்.

பிறந்த ஊர்:

  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு:

   இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

பணி:

  சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

படைப்புகள்:

  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலியன.

காலம்:

26.08.1883 – 17.09.1953

நூல் குறிப்பு:

    வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமை வேட்டல். தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

நூல் பயன்:

    இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும்; மனித நேயம் மலரும்; உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.

 திருக்குறள்

வாய்மை

அறத்துப்பால்

அதிகாரம்(30)

அறம்-துறவறவியல்

 1.வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

விளக்கம்: வாய்மை என்பது மற்றவர்களுக்கு தீமை பயக்கும் சொற்களை பேசாமல் நன்மை செய்வதே ஆகும்.

 

2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

விளக்கம்: ஒருவனுக்கு பொய்யான ஒன்றை கூறி அவனுக்கு நன்மை பயக்கும் என்றால் அதுவே வாய்மை எனப்படும்.

 

3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம்: ஒருவன் மனசாட்சிக்கு விரோதமாக பொய் கூறினால்,அதுவே அவன் நெஞ்சை வருந்தி கொண்டிருக்கும்.

 

4.உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

விளக்கம்: ஒருவன் பொய் கூறாது வாழ்ந்தால் அவனை இவ்வுலகம் பாராட்டும்,எல்லார் உள்ளங்களிலும் இருப்பான்.

 

5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை.

விளக்கம்: உள்ளத்திலும்,பேச்சிலும் தூய்மையாக இருப்பவரை தானம் தவம் செய்பவரைக் காட்டிலும் உயர்வாகக் கருதுவர்.

 

6.பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.

விளக்கம்: ஒருவன் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருந்தால்,அவனுக்கு புகழும் நன்மையும் வந்து சேரும்.

 

7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம்: பொய் சொல்லாது வாழ்ந்தால்,தான தருமங்கள் செய்யாமல் எல்லா அறங்களும் ஒரு சேர வந்து விடும்.

 

8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

விளக்கம்: உடம்பு நீரால் தூய்மை அடையும்.அதுபோல,மனம் வாய்மையால் தூய்மை அடையும்.

 

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம்: விளக்கானது இருளை நீக்கி வெளிச்சைத்தைத் தருவது போல,வாய்மை என்னும் விளக்கு சான்றோர்க்கு நல்ல புகழை தரும்.

 

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

விளக்கம்: உண்மை பேசுவதே இவ்வுலகில் பெரிய அறமாகக் கருதப்படுகிறது.அதுவே வாய்மையின் தலைமைப்பண்பாக  விளங்குகிறது.