Thursday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 7ம் வகுப்பு - இயல் 1 - செய்யுள்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

 

         7ம் வகுப்பு

           இயல் 1

செய்யுள்  (Source TN Textbook)

வாழ்த்து

பண்ணினை இயற்கை வைத்த                                         பண்பனே போற்றி போற்றி                                        பெண்மையில் தாய்மை வைத்த                                        பெரியனே போற்றி போற்றி                                              வண்மையை உயிரில்வைத்த                                             வள்ளலே போற்றி போற்றி                                         உண்மையில் இருக்கை வைத்த                                        உறவனே போற்றி போற்றி.

பொருள்:                                                                         இசையை இயற்கையோடு இணைத்த பண்பாளனே! பெண்களுக்குத் தாய்மைபால் பெருமை சேர்த்த பெருமைக்குரியவனே! கொடைத்தன்மையை உயிரினங்களுக்குத் தந்த வள்ளல் தன்மை உடையவனே! உள்ளத்தில் உண்மையை வைத்த உறவுடையோனே! உன்னை வாழ்த்துகின்றேன்.

சொற்பொருள்:                                                               பண் – இசை;                                                                 வண்மை – கொடைத்தன்மை;                                       போற்றி – வாழ்த்துகிறேன்.

ஆசிரியர் குறிப்பு

பெயர்:

திரு.வி.கலியாணாசுந்தரனார் (திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. என்பது.)

பெற்றோர்:

  விருத்தாசலனார் – சின்னம்மையார்.

பிறந்த ஊர்:

  காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம். இவ்வூர், தற்பொழுது தண்டலம் என அழைக்கப்படுகிறது. இவ்வூர், சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.

சிறப்பு:

   இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்துக்கும் அயராது பாடுபட்டார்; மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் தமிழ்த்தென்றல் எனச் சிறப்பிக்கப்படுகிறார்.

பணி:

  சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகவும், நவசக்தி முதலான இதழ்களில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

படைப்புகள்:

  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை, முருகன் அல்லது அழகு முதலியன.

காலம்:

26.08.1883 – 17.09.1953

நூல் குறிப்பு:

    வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் நூலில் போற்றி என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. நாடு, மதம், இனம், மொழி, நிறம் அனைத்தையும் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுவதே பொதுமை வேட்டல். தெய்வநிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

நூல் பயன்:

    இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும்; மனித நேயம் மலரும்; உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.

 திருக்குறள்

வாய்மை

அறத்துப்பால்

அதிகாரம்(30)

அறம்-துறவறவியல்

 1.வாய்மை எனப்படுவ(து) யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

விளக்கம்: வாய்மை என்பது மற்றவர்களுக்கு தீமை பயக்கும் சொற்களை பேசாமல் நன்மை செய்வதே ஆகும்.

 

2.பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கு மெனின்.

விளக்கம்: ஒருவனுக்கு பொய்யான ஒன்றை கூறி அவனுக்கு நன்மை பயக்கும் என்றால் அதுவே வாய்மை எனப்படும்.

 

3.தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம்: ஒருவன் மனசாட்சிக்கு விரோதமாக பொய் கூறினால்,அதுவே அவன் நெஞ்சை வருந்தி கொண்டிருக்கும்.

 

4.உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்.

விளக்கம்: ஒருவன் பொய் கூறாது வாழ்ந்தால் அவனை இவ்வுலகம் பாராட்டும்,எல்லார் உள்ளங்களிலும் இருப்பான்.

 

5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை.

விளக்கம்: உள்ளத்திலும்,பேச்சிலும் தூய்மையாக இருப்பவரை தானம் தவம் செய்பவரைக் காட்டிலும் உயர்வாகக் கருதுவர்.

 

6.பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.

விளக்கம்: ஒருவன் எந்த சூழ்நிலையிலும் பொய் பேசாமல் இருந்தால்,அவனுக்கு புகழும் நன்மையும் வந்து சேரும்.

 

7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம்: பொய் சொல்லாது வாழ்ந்தால்,தான தருமங்கள் செய்யாமல் எல்லா அறங்களும் ஒரு சேர வந்து விடும்.

 

8.புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.

விளக்கம்: உடம்பு நீரால் தூய்மை அடையும்.அதுபோல,மனம் வாய்மையால் தூய்மை அடையும்.

 

9.எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.

விளக்கம்: விளக்கானது இருளை நீக்கி வெளிச்சைத்தைத் தருவது போல,வாய்மை என்னும் விளக்கு சான்றோர்க்கு நல்ல புகழை தரும்.

 

10.யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

விளக்கம்: உண்மை பேசுவதே இவ்வுலகில் பெரிய அறமாகக் கருதப்படுகிறது.அதுவே வாய்மையின் தலைமைப்பண்பாக  விளங்குகிறது.

Wednesday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 9 - துணைப்பாடம்

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 9

துணைப்பாடம்  (Source TN Textbook)

வணக்கம் ஐயா!

         சந்தை கூடி இருந்தது. வகைவகையான பொருள்களை விற்கும் பல்வேறு கடைகள். கூவிக்கூவிப் பொருள்களை விற்கும் வணிகர்கள். திரும்பிய பக்கம் எல்லாம் மக்கள் கூட்டம். காய்கறி, பழங்கள், மட்பாண்டங்கள், துணிமணிகள்... இப்படிப் பல பொருள்களும் விற்கும் கடைகளுக்கு நடுவே மாறுபட்ட ஒரு குரல் ஒலித்தது.

 

   “சொல் வாங்கலியோ... சொல்!

 

   நாக்குல நல்ல சொல் இருக்கு; கெட்ட சொல்லும் இருக்கு.

 

   சொல் வாங்கலியோ... சொல்...!

 

      அங்கே போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்கள். பெரியவர் ஒருவர் கேட்டார்: “இந்த ஊர்ச்சந்தை மிகவும் புகழ்மிக்கது. இங்க புடலங்காயில் இருந்து, புதுத்துணி வரைக்கும் எல்லாம் வாங்கலாம். ஆனா, நீ சொல்லை விற்கிறாயே! இது புது வாணிகமாக இருக்கே...?”

 

   அந்த வணிகர் சொன்னார்: “புது வாணிகந்தாங்க... வாழ்க்கையில் காயம்பட்ட மக்களுக்கும் கவலைப்படுகின்ற மக்களுக்கும் ஆறுதல் சொல் வேண்டும். குழப்பத்துல தவிக்கின்ற கோடானுகோடி மக்களுக்கும் சொல் வேணும்... அதனால்தான் சொல்லை விற்கிறேன்...”

 

       பக்கத்தில் ஏதோ சத்தம் உரக்கக் கேட்டது. அப்பாவியாகத் தோற்றம் அளித்த ஒருவன் இரு கைகளையும் நீட்டி வானத்தைப் பார்த்துச் சுற்றிச்சுற்றி வந்தான். பக்கத்தில் இருந்தவர்கள் “என்னப்பா இப்படி, உன்னையே சுற்றிக் கொள்கிறாயே” எனக் கேட்டனர்.

 

    “அம்மாவும் நானும் சந்தைக்கு வந்தோம். அம்மாவைக் காணோம்; சுற்றிச் சுற்றித் தேடச் சொல்லி ஒருவர் சொன்னார். அதனால்தான் சுற்றுகிறேன்.” என்றான், அந்த அப்பாவி.

 

     “சரியான முட்டாள் நீ” என்றான் ஓர் ஆள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த சொல் வணிகர், “சில முட்டாள்களையும் அறிவாளியாக்க சொல் என்னிடம் இருக்கிறது...” என்று சொன்னார். அப்பாவி, அவரிடம் வந்து, “என்ன விற்கிறீங்க?” என்று கேட்டான். “சொற்களை விற்கிறேன். காசு இருந்தால் கொடு. உனக்கும் சொற்கள் தேவைப்படும்...” என்றார், வணிகர்.

 

    “என்கிட்ட காசு இல்லைங்க... நாளைக்குத் தர்றேனே...” என்ற அந்த அப்பாவியிடம், “சரி, உன்னைப் பார்த்தால் பாவமாக இருக்கு. நான் ஒரு சொல்லைத் தர்றேன்... நீ எல்லாரிடமும் அதனையே சொல்லு. ‘வணக்கம்...’ அதுதான், நான் உனக்குக் கொடுக்கும் சொல்.”

 

     அப்பாவி அவரிடம், ‘வணக்கம்’ சொல்லிவிட்டு அப்புறம் சென்றான். சற்றுத்தொலைவு செல்வதற்குள் வெளிநாட்டுப் பயணி ஒருவர் எதிரே வந்தார். அவரைப் பார்த்தவுடன், “வணக்கம்” என்றான் அப்பாவி. அவரது முகம் பூப்போல் மலர்ந்தது. மகிழ்ச்சியாய் அப்பாவியை அணைத்துக் கொண்டார்; தட்டிக் கொடுத்தார்.

 

     “காலையிலிருந்து ஏன் என்று கேட்பார் இல்லாமல் வழிகேட்டு அலைந்தேன். வந்தவர்களை மதிக்கத் தெரிந்தவன் நீதான்... ‘வணக்கம்’ என்னும் சொல்லை எவ்வளவு அன்புடன், அழகாகச் சொல்கிறாய். அருமை... அருமை..” எனப் பாராட்டினார். அத்துடன் நிற்கவில்லை; பொற்காசுகளையும் வழங்கினார்.

 

     அப்பாவி மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல் வணிகரிடம் போய் நடந்ததனைச் சொன்னான். அவரிடம் பொற்காசுகள் அனைத்தையும் கொடுத்தான். அவரோ, “தனக்குப் பாதி மட்டும் போதும்; மீதியை நீயே வைத்துக் கொள்” எனச் சொன்னார்.

 

    வணிகரிடம், தனக்கு வேறு புதிய சொற்களைக் கற்றுத் தருமாறு அப்பாவி கேட்டான். அவர், உடனே இரு சொற்களைச் சொல்லிக் கொடுத்தார். “மகிழ்ச்சியாய் இருங்கள். இந்தச் சொற்களை யாரைப் பார்த்தாலும் சொல், சரியா?” என, அவர் சொன்னதும் அப்பாவி மகிழ்ச்சியுடன் கிளம்பினான்.

 

     நகரத் தெருவில் அப்பாவி சென்றான். எதிரே வந்த ஒவ்வொருவரையும் பார்த்து ‘மகிழ்ச்சியாய் இருங்கள்’ எனச் சொல்லிக்கொண்டே சென்றான்.

 

     எதிரே பெரும் ஊர்வலம் ஒன்று ஆரவாரமாக வந்தது. அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானைகள் வந்தன. குதிரைப்படை வீரர்கள் வந்தார்கள். முரசுகள் அதிர, கொடிகள் பறக்க வந்தார்கள். என்ன செய்தி...? வேட்டையாடுவதற்காகச் சென்றிருந்த அரசன் நாடு திரும்பிக் கொண்டிருந்தான்.

 

      அப்பாவி அதனைப் பார்த்தான். காவலர்கள் தடுத்தார்கள். ஆனால், முண்டியடித்துக் கொண்டு அரசனின் முன்பாகச் சென்றுவிட்டான். பவனி வந்த அரசனின் எதிரே நின்று, “மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான்.

 

       அரசன் சினம் கொண்டான். “என்ன திமிர்! இந்த நாட்டின் அரசன் நான். என்னை வழி மறிந்து வாழ்த்துகிறான் ஒரு பொடியன்” என்று கத்தினான். காவலர்களை அழைத்தான். அப்பாவியைச் சிறையில் அடைக்கும் படி ஆணையிட்டான்.

 

    உடனே அப்பாவி, “மகிழ்ச்சியாய் இருங்கள்.” என்றான்.

 

   அரசனுக்கு இன்னும் சினம் மிகுந்தது. “இவன் என்னைக் கேலி செய்கிறான்; ஏளனப்படுத்திவிட்டான். இவனைக் கொலைக்களத்திற்குக் கொண்டுசென்று தலையை வெட்டுங்கள்”. என்று ஆணையிட்டான். அப்பாவியோ, “மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான்.

 

      அப்பாவியைக் கொலைக்களத்திற்கு இழுத்துச் சென்ற வீரர்களிடமும் “மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான். தலையை வெட்டுவதற்குத் தயராக வாளுடன் நின்ற முரடர்கள் இருவரிடமும் அதே சொற்களைச் சொன்னான். முரடர்களுக்குப் புரியவில்லை. தலையை வெட்ட வாளை ஓங்கினார்கள். அப்போது அப்பாவி “மகிழ்ச்சியாய் இருங்கள்” என்றான்.

 

     முரடர்களுக்குக் கண் கலங்கியது; வெட்ட ஓங்கிய வாள்களை அவர்கள் கீழே போட்டுவிட்டார்கள்.

 

       “கொலையாளிகள் நாங்கள்! கொடூரமான முறையில் கழுத்தை வெட்டுகிறோம். எங்களைப்பார்த்து, “மகிழ்ச்சியாய் இருங்கள்” என்று சொன்ன முதல் மனிதன் இவன்தான். இவன் சொற்களில் கருணை இருக்கிறது. எங்களால் இவனை வெட்ட முடியாது. அரசர் எங்களை அரிவாளால் கூறுபோட்டாலும் சரி; நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வோம்” என்றார்கள்.

 

       எல்லாரும் அரசனிடமே  சென்று அவனது முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்டார்கள். நடந்தவற்றை எல்லாம் சொன்னார்கள். அரசன் குழப்பம் அடைந்தான்.

 

      அப்போது வெளிநாட்டுப் பயணி அரசவைக்கு வந்தார். அப்பாவியைப் பார்த்ததும் கட்டிக் கொண்டார். “அரசே! இவன்தான் உங்கள் நாட்டுப் பண்பாட்டை எனக்குப் புரிய வைத்தவன்” என்றார். மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். அப்பாவியை விடுதலை செய்தான். அவனுக்குப் பொன்னும் பொருளும் கை நிறைய வழங்கினான்.

 

   பொன்பொருள் முதலான பரிசுகளுடன் அப்பாவி, அம்மாவிடம் திரும்பினான். மகனை மகிழ்ச்சிப் பொங்க அணைத்துக்கொண்டாள், அம்மா. “வணக்கம்... மகிழ்ச்சியாய் இருங்கள்!” என்று அம்மாவிடம் சொன்னான், அப்பாவி.

Sunday

Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2 Language I - Tamil - 6ம் வகுப்பு - இயல் 9 - உரைநடை

 Tamil Nadu Teachers Eligibility Test – Paper 2

Language I - Tamil

6ம் வகுப்பு  

           இயல் 9


உரைநடை 
  (Source TN Textbook)

எது பண்பாடு

(கூடிப் பேசுவோம் வாங்க...)

நிகழ்வு – 1

    செந்திலைப் பார்த்திருக்கிறீர்களா? ஆறாம் வகுப்புப் படிக்கிறான்; அவன் படுசுட்டி; ஓர் இடத்தில் நிற்கமாட்டான்; எப்போதும் ஓட்டமும் நடையுமாகத்தான் இருப்பான்.

 

     அவனிடம் ஒரு பழக்கம் உண்டு. நடக்கும்போதே வழியெல்லாம் எச்சிலைத் துப்புவான். யாராவது கேட்டால், “உனக்கென்ன?” என்பான்.

 

   தட்டிக்கேட்டால், அவனுக்குச் சினம் வரும். ஆனால், எச்சில் துப்புவதனை மட்டும் நிறுத்தவே மாட்டான். இவ்வாறு எச்சில் துப்புவதனால், காற்றில் நோய் உயிரிகள் பரவி, மற்றவர்களுக்கும் நோய்வர வாய்ப்புகள் உண்டு எனக் கூறியும் துப்புகிறான்.

 

கூடிப் பேசுவோம்

     செந்தில் செய்வது முறையா?

 

     பொது இடங்களில் எச்சில் துப்பினால் என்னென்ன கெடுதல் வரும்?

 

     ‘எச்சிலை எங்கே துப்பினால் என்ன?’ எனக் கேட்கும் செந்திலுக்கு உங்கள் பதில் என்ன? உன்னுடன் வருவோர் எச்சில் துப்பினால், அவர்களுக்கு நீ எவ்வாறு எடுத்துரைப்பாய்?

 

நிகழ்வு – 2

     சுந்தரத்தின் அப்பா பெயர் பழனி. ஆனால், எல்லாருக்கும் ‘நன்றிபழனி’ என்றால்தான் உடனே தெரியும். அஃதென்ன... ‘நன்றிபழனி...’? யாரிடம் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் உடனே ‘நன்றி’ சொல்கிற பழக்கம் உடையவர் பழனி.

 

      ஒருநாளைக்கு ஆயிரம் தடவையாவது, ‘நன்றி’ என்னும் சொல்லைப் பயன்படுத்திவிடுவார்.

 

     பேருந்தில் நடத்துநர் பயணச்சீட்டுக் கொடுப்பார்; பழனி ‘நன்றி’ என்பார். அஞ்சல்காரர் பழனியிடம் கடிதம் கொடுப்பார், அதற்கும் ‘நன்றி ஐயா’ என்பார்.

 

    சுந்தரம், அப்பாவிற்குத் தண்ணீர் கொடுப்பான்; அதற்கும் ‘நன்றி’ சொல்வார் பழனி.

 

கூடிப் பேசுவோம்

     எதற்கெடுத்தாலும், ‘நன்றி’ சொல்கிற பழக்கம் உடையவர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

 

     ‘நன்றி’ என்பது வெறும் சொல்தானே, அதனைச் சொன்னால் என்ன, சொல்லாவிட்டால் என்ன என்று நினைக்கிறீர்களா?

 

    யாருக்காவது நீங்கள் ‘நன்றி’ சொன்னது உண்டா?

 

    ‘மகிழ்ச்சி’ என்னும் சொல்லை எங்கெங்கு எல்லாம் பயன்படுத்தலாம் என நண்பர்களுடன் கலந்துரையாடுக.

 

நிகழ்வு – 3

  அந்த வரிசை நீண்டிருந்தது. ஒரே கூட்டம்.

  ஆண்களும் பெண்களும் கலந்து ஒரே வரிசையில் நின்றிருந்தார்கள்.

  மேலிருந்து பார்த்தால் பெரிய மலைப்பாம்பு படுத்திருப்பதுபோல் வரிசை தெரியும்.

   கதவு திறக்கட்டும் என எல்லாரும் காத்திருந்தனர்.

   முத்து அங்கே வந்தான்; ஆள் நல்ல உயரம்; கையைக் கட்டிக்கொண்டு சிறிதுநேரம் வேடிக்கை பார்த்தபடி நின்றான்.

   அவன் வரிசையில் நிற்கவில்லை.

   கதவு திறந்ததும் விரைவாய் முன்னால் ஓடினான், முத்து.

   கூட்டத்தில் இருந்த சிலர் சொன்னார்கள்.

   “யாரப்பா அது? நாங்கள் வரிசையில் நிற்கிறோமே, தெரியலயா!”

    முத்து, முறைத்தபடி கூட்டத்தைப் பார்த்துச் சொன்னான்:

    “உங்க வேலையைப் பாருங்க. எல்லாம் எனக்குத் தெரியும்.”

  இன்னும் சிலர் சொன்னார்கள்.

  “நமக்கு எதுக்கு வம்பு? போனா போயிட்டுப் போறான்.”

  ஒருவர் உரக்கச் சொன்னார்.

  “இப்படியே வர்றவங்க முன்னால போனா, நாம எப்போ போறது?

   இதனை யார்தான் கேட்பது?”

 

கூடிப் பேசுவோம்

     முத்து செய்தது முறைதானா?

     மக்கள் நீள்வரிசையில் நின்றிருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

     ஆண், பெண் எனத் தனித்தனி வரிசை தேவையா? எங்கெங்கு எல்லாம் வரிசைமுறையைப் பின்பற்றுதல் வேண்டும்? ஏன்? வரிசைமுறையை மீறிச் செல்பவரைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

 

நிகழ்வு – 4

     செண்பகத்தின் அப்பா எல்லாரையும் ‘அவன்’, ‘இவன்’ என்றுதான் அழைப்பார். சாலையில் போகும் காய்கறிக்காரரை, ‘ஏய், காய்கறி’ என்று அழைப்பார்.

   

      வீட்டிற்கு வரும் தோட்டக்காரர் மாணிக்கத்தைத், “தோட்டக்காரா... இங்கே வா!” என்று அப்பா கூப்பிடுவார்; நாள்தோறும் வீட்டிற்குச் செய்தித்தாள் போடுபவரை, “பேப்பர்காரன்” என்றுதான் சொல்வார்.

 

     இதில் அப்பாவுக்கு நேர் எதிரானவர் அம்மா. வயதில் குறைந்தவர்களைக்கூட ‘வாங்க,போங்க’ என்றுதான் சொல்வார்.

 

    செய்யும் தொழிலை வைத்து ஒருவரை மரியாதைக் குறைவாகக் கூப்பிடுவது அம்மாவுக்குப் பிடிக்காது.

 

    அப்பா பிறரைக் கூப்பிடுவதனைப் பார்த்த செண்பகமும் ஒருநாள் மாணிக்கத்தைத், “தோட்டக்காரா... இங்கே வா!” என்று கூப்பிட்டாள்.

 

    அம்மா அதட்டினாள். “பெரியவங்களை அப்படிக் கூப்பிடக் கூடாது, தெரியுதா?”

   

    செண்பகம் பதிலுக்குக் கேட்டாள். “அப்பா மட்டும் அப்படிக் கூப்பிடலாமா?”

 

   ஒருவரைப் பெயர் சொல்லி அழைக்கலாமா?

   வயதில் பெரியவர்களை வா, போ என ஒருமையில் பேசலாமா?

   உங்களைப் பெயர் சொல்லி அழைத்தால், மகிழ்ச்சியாக இருக்கிறதா?

    ‘ஏய்... இங்கே வா’ எனப் பெயர் கூறாமல் அழைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறதா?

 

  சமுதாயம் என்பது நாம்தாமே. நாம் ஒவ்வொருவரும் பண்புடன் நடக்கும்போது, சமுதாயமே பண்பாடுமிக்க சமுதாயமாக மாறிவிடும். நாம்தாம் நல்ல பண்பாட்டை உருவாக்குதல் வேண்டும். அதற்கு, நமக்குள் உறுதியான நல்ல மனப்பான்மை வேண்டும். கடைப்பிடிப்போம்; நல்ல பண்புமிக்க சமுதாயத்தை உருவாக்குவோம்.

ஆலந்தூர் மோகனரங்கன்

  GROUP   II   &   II A          தமிழ்          பகுதி – இ தமிழ் அறிஞர்களும் , தமிழ் தொண்டும் புதுக்கவிதை – ந.பிச்சமூர்த்தி , சி....